தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீமானை பின்னால் இருந்து இயக்கியது இவர்களா? - நாதகவில் இருந்து வெளியேறியவர்கள் திடுக்கிடும் தகவல்!

சீமானை பின்னால் இருந்து இயக்கியது யார் என்று, தற்போது அவர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததன் மூலம் தெரிய வந்துள்ளது என நாதகவில் இருந்து வெளியேறியவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீமான், நாதகவில் இருந்து வெளியேறிய வெற்றி குமரன்
சீமான், நாதகவில் இருந்து வெளியேறிய வெற்றி குமரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 6:16 PM IST

திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தென் மண்டல செயலாளராக இருந்து அதிலிருந்து வெளியேறிய வெற்றி குமரன் மற்றும் திருச்சி மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், "நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்கிற பெயரில் இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம். தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில், திருச்சியில் நாளை மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.

நாதகவில் இருந்து வெளியேறிய வெற்றி குமரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தில், நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்த 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய அனைவரும் நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

சீமானை பின்னால் இருந்து சிலர் இயக்கி வந்தனர். அது யார் என்று எங்களுக்கு தெரியாமல் இருந்தது. தற்பொழுது அவர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததன் மூலம் சீமானை பின்னால் இருந்து இயக்கியது வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

புலம்பெயர் ஈழ தமிழர்கள் சீமான் மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டனர். அவர்கள் நாங்கள் தற்போது எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர். சீமான் நோக்கம் ஆரம்பத்தில் சரியாக இருந்தது. ஆனால், தற்போது அவர் வலதுசாரி சித்தாந்தவாதிகளின் பிடியில் சென்று விட்டார்.

எந்த விவகாரமாக இருந்தாலும் தன்னை பற்றியே பேச வேண்டும் என எண்ணி கருத்து சொல்பவர் சீமான். அதன் பின் விளைவுகள் குறித்து அவர் கவலைப்பட மாட்டார். அப்படித்தான் ஸ்லீபர் செல் என்பதையும் பேசி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய பலர் தற்பொழுது தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

ஈழத்தில் தமிழர்களுக்கு தனி நாடு என்பதுதான் எங்களுடைய நோக்கம். இது தவிர தமிழ்நாட்டில் தமிழர் நலன் தமிழர் உரிமை பாதுகாக்கக் கூடிய ஒரு அரசு உருவாக வேண்டும். அதுதான் உங்களுடைய முக்கியமான நோக்கம் நாம் தமிழர் கட்சியின் நோக்கமும் அதுவாக தான் இருந்தது.

தற்பொழுது அதன் தலைமை சரியில்லாததால் நாங்கள் பொது இயக்கத்தை உருவாக்கி அதே நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். திராவிட கட்சிகளை வீழ்த்த வேண்டும் என சிலர் சீமானை கருவியாக பயன்படுத்துகிறார்கள். அதற்கான பலனையும் அவர் அனுபவித்து கொள்கிறார்.

இதையும் படிங்க :ரஜினி - சீமான் திடீர் சந்திப்பு! உறுதிசெய்த சாட்டை துரைமுருகன்

சீமானுக்கு திராவிட கட்சிகளை குறை கூற என்ன தகுதி இருக்கிறது. இனி அவரால் அதிகாரத்திற்கு வர முடியாது. குறைந்தபட்சம் அவர் இனி திருந்த வேண்டும். நாம் தமிழர் கட்சிக்குள் பனிப்போர் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்தது. எதையும் ஆலோசிக்காமல் சீமான் தானாகவே முடிவெடுத்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவை சீமான் சந்தித்தார். அது கூட எதற்காக சந்தித்தார் என்பது எங்கள் யாருக்கும் தெரியாது. அவரை பின்னால் இருந்து இயக்கியவர்கள் தான் அந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்கள். பனிப்போர் கடந்த சில ஆண்டுகளாக சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் தான் நாங்கள் கட்சியிலிருந்து வெளியேறி உள்ளோம்.

நடிகர் விஜய் தமிழ் தேசியமும் என்னுடைய ஒரு கண் என பேசி இருப்பது மகிழ்ச்சி தான். ஆனால் வரும் காலங்களில் அவருடைய செயல்பாடுகளை பார்த்து விட்டு தான் முழுமையாக அவர் குறித்து பேச முடியும்.
நாம் தமிழர் கட்சியை சீமான் உருவாக்கவில்லை நாங்கள் அனைவரும் சேர்ந்து தான் நாம் தமிழர் கட்சியை உருவாக்கினோம்.

அதில், சீமானும் ஒருவர் அவர் பிரபலமாக இருந்ததால் அவரை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம். அந்த நேரத்தில் எல்லாம் சீமானிடம் ஜனநாயக பண்பு இருந்தது. வளர, வளர தான் அவர் போக்கு மாறியது.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும்.

ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள் தான் என சீமான் பேசியதை நாங்கள் கண்டித்தோம். ஒரு காலக்கட்டம் வரையிலும், நாங்கள் சொல்வதை அவர் கேட்டுக்கொண்டார். அதன்பின் அவர் எதையும் கேட்கவில்லை. திரள் நிதி தொடர்பான கணக்குள் யாருக்கும் தெரியாது.

நாம் தமிழர் கட்சியில் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் பெயர் அளவில் தான் இருப்பார்கள். பொறுப்புக்கான வேலையை செய்ய மாட்டார்கள், செய்யவும் விட மாட்டார்கள். வேலை செய்யாத ஆட்களை தான் பொறுப்பாளர்களாக நியமிப்பார்கள்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details