தூத்துக்குடி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் வகையில், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக, தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என்று மூன்று குழுக்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இக்குழுவில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவில் செய்தி தொடர்பாளர் டி.கே எஸ் இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் எம்.பி, மாணவர் அணி செயலாளர் சி.வி.எம் எழிலரசன், அயலக அணி செயலாளர் எழிலன், நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அனைத்து மாவட்ட மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் இந்த குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று தொடங்கி பிப்.23 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் இன்று (பிப்.5) தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பட்ட தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர்கள், மீனவர்கள், மாணவர் சங்கங்கள், தொழிலாளர் நல பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்களை நேரடியாக மனுக்களாகப் பெற்றனர்.