சென்னை: சென்னை மயிலாப்பூரில், 'மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல்' என்ற நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டார். இதில், கனிமொழியிடம் மாணவர்கள் அரசியல் நுழைவு, வாரிசு அரசியல், திராவிட மடல், இந்தி திணிப்பு, சாதி மறுப்பு திருமணம், ஆணவக் கொலை, சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
அரசியல் நுழைவு: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கைது நிகழ்ச்சி அனைத்துமே புதிதாக இருந்தது. காவலர்களுடன் தான் ஒரு சாதாரண கேள்வி எழுப்பிய போதும், அதனையும் குற்றமாக எதிர்கொண்ட தருணத்தை நினைவு கூர்ந்தார். மேலும், அந்த அசாதாரண தருணத்திலும், கருணாநிதி எளிதாக, பயமின்றி, தெளிவாக ஒரு போராளியாக எதிர்கொண்டதையும், அதுவே தனது அரசியல் நுழைவு என்று தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: சட்டங்களை விடவும், சமூக ரீதியாக நாம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களின் உரிமைகளை நிலைநாட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய வேண்டும். மேலும், பொதுவாழ்வில் பங்கேற்கும் பெண்கள் இத்தகைய கீழ்த்தரமான விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு தங்களின் செயல்கள் மூலமாக பதிலளிக்க வேண்டும் என்றார்.