தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கீரனூர், நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் - வனிதா தம்பதியர், இவர்களுக்கு 2 மகள்களும் நந்தகோகுல் என்ற ஒரு மகனும் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன் கடந்த 8 வருடத்திற்கு முன்னர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி வனிதா ஆத்தூர் அருகே உள்ள தனியார் மீன் பதப்படுத்தப்படுத்தும் தொழிற்சாலையிலும், வீட்டில் வைத்து தையல் தைத்தும் தனது 3 பிள்ளைகளையும் வளர்த்து வருகிறார்.
இத்தகைய சூழ்நிலையில், நந்தகோகுல் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து, கடந்த 2023ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 600க்கு 484 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனையடுத்து, மருத்துவம் படிக்க நினைத்த நந்தகோகுல் அந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால், தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை.
இருந்த போதிலும், மகனின் மருத்துவ கனவை நிறைவேற்ற எண்ணிய நந்தகோகுலின் தாய் வனிதா, இரவு, பகலாக தொழிற்சாலையில் பணி செய்தும், வீட்டில் தையல் தொழிலில் கிடைத்த குறைந்த வருமானத்தை வைத்து நந்தகோகுலை தனியார் நீட் பயிற்சி வகுப்பில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.
இத்தகைய சூழலில், விடாமுயற்சியோடு கடினமாக உழைத்த நந்தகோகுல், அண்மையில் நடந்த நீட் தேர்வில் 720க்கு 641 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து நந்தகோகுல் கூறுகையில், 12ஆம் வகுப்பில் 484 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த நிலையில், தற்போது நீட் தேர்வில் 641 மதிப்பெண் பெற்று அரசு இட ஒதுக்கீட்டில் 10வது இடம் பிடித்து, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான சீட் கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இட ஒதுக்கீடு மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் அந்த வாய்ப்பை பயன்படுத்தி 2வது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். மேலும், கீரனூர் கிராமத்தில் மருத்துவர்கள் இல்லை. ஆகவே, எங்கள் கிராமத்தில் முதல் மருத்துவர் என்ற மகிழ்ச்சி எனக்கு உள்ளது.