தூத்துக்குடி: மக்களவைத் தேர்தலுக்கான தேதி ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் மொத்தம் 1,622 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியை இரண்டாகப் பிரிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,624 ஆக உயரும்.
அதில் தற்போதைய நிலையில் 286 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 2 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு முழுமையாக வெப் கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தூத்துக்குடி வஉசி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படுகிறது. அங்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 7,08,244 ஆண்கள், 7,39,720 பெண்கள், 215 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,48,179 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் மண்டல குழுக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்லவும், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அவற்றைக் கொண்டு செல்வதற்காகவும் 136 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மண்டல குழுக்களுக்கான முதல் கட்ட பயிற்சி கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்டு, அவர்கள் வாக்குச்சாவடிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பறக்கும் படை தேர்தல் விதிமுறைகளைக் கண்காணிக்க ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் பறக்கும் படை என மொத்தம் 54 பறக்கும் படை குழுக்களும், 54 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக சுமார் 10,000 பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4,431 வாக்குப்பதிவு அலகுகள், 2,090 கட்டுப்பாட்டு அளவுகள், 2,595 விவி பாட் கருவிகள் பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர 163 வாக்குப்பதிவு அலகுகள், கட்டுப்பாட்டு அலகுகள், விவி பாட் கருவிகள் தனியாக விழிப்புணர்வு, மற்றும் பயிற்சிகளுக்கான பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல் கட்டமாக ரயில்வே பாதுகாப்புப் பணியைச் சேர்ந்த 48 பேர் வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். அதேபோல் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: தூத்துக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு!