தூத்துக்குடி:சோழர், பாண்டிய ஆட்சிக் காலத்தில் இருந்தே தமிழகத்துக்கும், மாலத்தீவுக்கும் இடையே பாரம்பரியமாக கடல்வழி வாணிபம் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பாய்மரத் தோணிகள் மூலமாக சரக்குப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தது. இத்தொழிலை இன்று வரை பாதுகாத்து பொதுமக்களுக்கு குறைவான விலையில் பொருள் கிடைக்கும் வகையில் தோணி தொழில் நடைபெறுகிறது.
ஏற்றுமதி:தூத்துக்குடியில் இருந்து மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிமெண்ட், பீடி இலை, மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்,சல்லி, மணல் உள்ளிட்ட பொருள்கள் தோணிகள் மூலம் லட்சத்தீவு, கொழும்பு, மாலத் தீவு, இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. நாள்தோறும் பல தோணிகள் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து சரக்கு ஏற்றிச் சென்றுள்ளன.
பின்னடைவை சந்திக்கும் தோணி தொழில்:தூத்துக்குடி பழைய துறைமுகத்தை தங்கும் தளமாகக் கொண்டு 12 மாதங்கள் 200 முதல் 450 டன் கொள்ளளவு கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட 40 தோணிகளில் வர்த்தகம் நடைபெற்ற நிலையில் நாளடைவில் 7, 8 மாதங்களாக குறைந்து 25 தோணிகளை கொண்டே வர்த்தகம் நடைபெறுகிறது. இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இத்தகைய சிறப்பு வாய்ந்த தோணிப் போக்குவரத்து பல்வேறு காரணங்களால் பின்னடைவைச் சந்தித்தது.
12 மாத வர்த்தகம்:நலிவடைந்த தோணித் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க தூத்துக்குடி தோணி உரிமையாளர் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இலங்கைக்கு 12 மாதங்கள் வர்த்தகம் நடைபெற அரசு தயாராக உள்ள நிலையில், லட்சத்தீவுக்கும், மாலத்தீவுகளுக்கும் 12 மாதங்கள் வர்த்தகம் நடைபெற அரசு ஒத்துழைக்க வேண்டும் என தோணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலநிலையால் மாறுபடும் தோணி போக்குவரத்து :தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுகளுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாக, தோணி போக்குவரத்து கடல் சீதோஷன நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. மே 1 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 30 ஆம் தேதி வரையில் கடினமான காலநிலை காணப்படுவதால் தோணி இயக்கப்படுவதில்லை. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் சுமுகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும்.
கடல் வாணிபத் துறை அனுமதி: தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தோணி போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இலங்கைக்கு சுமுகமான காலநிலை நிலவும் காலங்களில் மட்டும் தோணி இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்துக்கு கடல் வாணிபதுறை வாய்மொழி அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் இதற்கான உத்தரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இதே போன்று மாலத்தீவுக்கும், லட்சத்தீவுக்குக்கும் 12 மாதங்கள் தொழில் செய்யக்கூடிய அளவில் உருவாக்கி தர வேண்டும் என்று தோணி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:"இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம்" - பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா எச்சரிக்கை!