தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் 60 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 40வது வார்டு மாமன்ற உறுப்பினராக ரீக்டா இருந்து வருகிறார். இவரது கணவர் ஆர்தர் மச்சாது. இவர்கள் இருவரும் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில், திமுக வட்டச் செயலாளர் டென்சிங் மீது புகார் கொடுத்தனர்.
பாதிக்கப்பட்ட கவுன்சிலரின் கணவர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதுகுறித்து கவுன்சிலரின் கணவர் ஆர்தர் மச்சாது செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், "தூத்துக்குடி 40வது வார்டு திமுக மாநகராட்சி கவுன்சிலராக எனது மனைவி ரீக்டா மக்கள் பணி செய்து வருகிறார். இவருக்கு ஆதரவாக நானும் செயல்பட்டு வருகிறேன்.
இந்நிலையில், 40வது வார்டு வாட்ஸ் ஆப் குரூப்பில், 40வது வார்டு திமுக வட்டச் செயலாளர் டென்சிங் அவதூறு பரப்பும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இது தொடர்பாக டிஎஸ்பி அலுவலகம், தெற்கு காவல் நிலையம், ஏடிஎஸ்பி அலுவலகம் உள்ளிட்டவற்றில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முன்னதாக, கடந்த மே 18ஆம் தேதி அன்று மாலை, ஜார்ஜ் ரோடு கல்லறை தோட்டம் அருகே வைத்து திமுக வட்டச் செயலாளர் டென்சிங் தம்பி மகன் கெய்சன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர், என் மீது வண்டியை மோதுவது போல் வந்ததுடன், கொலை செய்து விடுவேன் என மிரட்டினர்.
இதுதொடர்பாக தெற்கு காவல் நிலையத்தில் கடந்த மே 24ஆம் தேதியன்று புகார் மனு அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், கெய்சன் மற்றும் லூர்து அமீர் ஆகிய இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், போலீசார் கைது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இருவர் மீது போலீசார் எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அமைச்சர் போலீசாரை மிரட்டி வருவதால், போலீசார் கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக, தொடர்ந்து திமுக வட்டச் செயலாளர் டென்சிங் மற்றும் கெய்சன் ஆகியோர் எங்களை மிரட்டி வருகின்றனர். யாரிடம் போய் சொன்னாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி வருகின்றனர்.
ஒரு திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவருக்கே திமுக ஆட்சியில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த விஷயத்தில் தலையிட்டு, உடனடியாக வழக்குப்பதிவு செய்து திமுகவினரை கைது செய்ய வேண்டும். மேலும், தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளைச் சார்ந்த மாமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அமைச்சர் கீதாஜீவன் வட்டச் செயலாளர்களை தூண்டிவிடும் சம்பவம் தொடர்கதையாக இருக்கிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கடைகளின் மேற்கூரையை பிரித்து திருட்டு.. மேற்கூரையிலே வைத்து கைது செய்த தனிப்படை! - serial theft punching holes in shop