சென்னை : புரட்டாசி மாதம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது அசைவம் சாப்பிடக்கூடாது என்பது தான். பெரும்பாலும் இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஏனென்றால் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். அதுமட்டுமின்றி புரட்டாசி மாதத்தின் அதிபதியாக புதன் திகழ்வதாலும், புதன் சைவத்திற்குரிய கிரகம் என்பதால் புரட்டாசியில் இந்துக்கள் அசைவம் சாப்பிடமாட்டார்கள்.
அதனால் தான் புரட்டாசி மாதம் இறைச்சி மற்றும் மீன்களின் விலைகள் குறையும். மேலும், நற்காரியங்கள் எதுவும் இந்துக்கள் நடத்த மாட்டார்கள். குறிப்பாக, திருமணம், வீடு கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறாது. இதனாலும் கூட இறைச்சிகள், மீன்களின் விலைகள் கடும் சரிவைச் சந்திக்கும்.
அந்த வகையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். குறிப்பாக பாறை, சங்கரா, சீலா, வஞ்சரம், வவ்வால், நண்டு, இறால் போன்ற மீன்களின் வரத்து அதிகரித்தும், அவைகளின் விலை குறைந்ததால் மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும் வாங்கி சென்றனர்.
காசிமேடு மீனவர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) மீன்களின் விலை குறைந்தது மக்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், மீன்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என கடலுக்கு சென்று மீன்பிடித்த மீனவர்கள் சோகத்துடன் இருக்கின்றனர். வழக்கமாக விற்கப்படும் விலைகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இன்று விலை போனதால் மீனவர்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினர்.
குறிப்பாக பாறை மீன் கூடை ரூ.1000, சங்கரா மீன் கூடை ரூ.2000, சீலா மீன் கூடை ரூ.2000, வஞ்சரம் மீன் கூடை ரூ.4500, வவ்வால் மீன் கூடை ரூ.4000, நண்டு கூடை ரூ.1200, ஈரால் கூடை ரூ.3500 என்ற விலையில் மீன்கள் காசிமேடு மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டன.
மலிவு விலையால் மகிழ்ச்சி :காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்வாங்க வந்த சென்னை சுங்கசாவடி பகுதியைச் சேர்ந்த சத்யமூர்த்தி என்பவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நான் மீன் வாங்குவதற்காக இங்கு வந்தேன். வவ்வால் மீன் வாங்க ஆசைப்பட்ட நான் அது ரூ.1000 இருக்கும் என நினைத்து வந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட மீன் ரூ.500க்கு கிடைத்து விட்டது. அதுமட்டுமல்லாமல் பாறை, இறால் போன்ற மீன்களும் விலை மலிவாகவே கிடைத்தது" என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மீன்களின் வரத்தும், நாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கான விலையும் கிடைக்கவில்லை என கடந்த 20 ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்யும் ஜெபமாலை தெரிவிக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, கடந்த 15 நாட்களுக்கு முன்பே கடலுக்கு சென்று மீன்பிடித்து இன்று கரைக்கு திரும்பினோம். நாங்கள் பிடித்த மீன் ரூ.7 லட்சம் வரை விற்பனையாகும் என ஆசையில் இருந்தோம். ஆனால் மீன்களின் விலை குறைவால் ரூ.3 லட்சத்திற்கு தான் விற்பனையானதால் தற்போது என்ன செய்வதென தெரியாத நிலையில் உள்ளோம்" என தெரிவித்தார்.
மேலும், மீன்களின் விலை குறைவால் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட வழியில்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறார் மீனவர் செந்தமிழன். இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் 15 நாட்கள் கடலில் இருந்துவிட்டு இன்று கரைக்கு திரும்பினோம். எங்களுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. ஒரு படகில் 20 பேர் வரை மீன்பிடிக்க செல்கிறோம். எங்களின் வருமானத்தை நம்பி 20 குடும்பத்தினர் உள்ளனர்.
எப்போதும் மீன்பிடிக்க சென்று கரைக்கு திரும்பினால் ரூ.10 - 15 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால், இன்று எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கடலுக்கு சென்று வந்து வீட்டில் சம்பளம் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் இவ்வளவு தானா என வீட்டில் இருப்பவர்கள் ஏளனமாக பார்க்கின்றனர். எதிர்பார்த்தது போல கடல் தொழில் இல்லை.
கேரளாவில் கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 நிரந்தர ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க செல்பவர்களுக்கு அதுபோன்று ஏதும் இல்லை. நாங்கள் தற்போது கடலுக்குள் சென்றுவர 5000 லிட்டர் டீசல் செலவாகியுள்ளது. இதுவே, சுமார் 5 லட்சமாகும். இதர செலவுகளை சேர்த்தால் ரூ.7 லட்சம் ஆகும்.
ஆனால், நாங்கள் பிடித்து கொண்டு வந்த மீன் ரூ.3 லட்சத்திற்கு மட்டும் விற்பனையாகி உள்ளதால் எங்களுக்கும் சரி, படகு உரிமையாளருக்கும் சரி என்ன கிடைக்கும் என தெரியவில்லை. நாங்கள் மீண்டும் கடலுக்குள் செல்ல வேண்டுமெனில் படகு உரிமையாளர் ரூ.4 லட்சம் கடன் பெற்றால் மட்டுமே செல்ல முடியும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்