சென்னை: சென்னையில் முறையாக சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் சரிவர முடியாமல் இருப்பதால், சென்னையில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசோக்நகர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தது, ஆலந்தூர் அருகே சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஐடி ஊழியர் பள்ளத்தில் சிக்கி சாலையில் தவறி விழுந்து உயிரிழந்தது, வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகே இருந்த பள்ளத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர் தவறி விழுந்து உயிரிழந்தது என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை :பருவமழை தொடங்குவதற்கு முன் சாலைகள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவித்திருந்த நிலையில் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதால், சாலைகள் பராமரிப்பு பணியினை சென்னை மாநகராட்சி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் ஏற்படும் விபத்து குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், "சென்னை வேளச்சேரி சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த நபர், குண்டும் குழியுமான ஆலந்தூர் சுரங்கப்பாதையில் நிலை தடுமாறிய தனியார் நிறுவனத்தின் இளம்பெண் என கடந்த ஒருவாரத்தில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே சாலைப் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள், முறையாக மூடப்படாததன் காரணமாக அதில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க தவறிய தமிழக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க :சென்னை: சாலையில் இருந்த பள்ளத்தால் அரசு பேருந்து ஓட்டுநர் மரணம் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
பிரதான சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்கள், மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் குழிகள் என ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பள்ளம், மேடுகளை கடந்து உயிரை பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் காணப்படும் பள்ளங்களை சீரமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் காட்டும் அலட்சியம் குறித்தும், ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைப்பதோடு, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என அதில் கூறப்பட்டுள்ளது.