தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் தண்டவாள லூப் லைனில் கொட்டிக் கிடந்த கற்கள், ஸ்பேனர்.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு! - STONES IN RAILWAY TRACK ISSUE

திருவொற்றியூர் - விம்கோ நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்பு ஸ்பேனர் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள்
ரயில் தண்டவாள கம்பிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த கற்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2025, 7:54 AM IST

சென்னை:திருவொற்றியூர் - விம்கோ நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்பு ஸ்பேனர் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் ஆந்திரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவொற்றியூர், விம்கோ நகர் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரயில்வே தண்டவாளங்கள் பாதுகாப்பாக உள்ளதா? எனக் கண்டறிய கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வ.உ.சி நகர், திருவொற்றியூர், விம்கோ நகர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாகத் தண்டவாளங்களை ஆய்வு செய்து கொண்டிருந்துள்ளனர்.

ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கல் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)

அப்போது, திருவொற்றியூர் - விம்கோ நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் மெயின் லைனில் இருந்து லூப் லைனிற்கு மாற்றும் இடத்தில் சிலர் கற்கள் மற்றும் இரும்பு ஸ்பேனரை வைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆய்விலிருந்த ரயில்வே போலீசார் உடனடியாக அதனை அப்புறப்படுத்தியுள்ளனர்.

மேலும், ரயில் செல்லும் வழித்தடத்தில் கற்கள் மற்றும் இரும்பு ஸ்பேனரை வைத்துச் சென்றது யார்? ரயிலைக் கவிழ்க்க யாரேனும் சதித்திட்டம் தீட்டி தண்டவாளத்தில் கற்களையும், இரும்பு ஸ்பேனரையும் வைத்துச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தோடு யாராவது இதைச் செய்துள்ளார்களா? என்ற அனைத்து கோணத்திலும் டி.எஸ்.பி கர்ணன், ஆய்வாளர் சசிகலா, லைன் மேன் ஆகியோர் அடங்கிய ரயில்வே போலீசார் குழு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டும், அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தஞ்சையில் நாய்கள் கண்காட்சி: செல்லப்பிராணிகளை கொஞ்சி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்!

இதுகுறித்து பேசிய ரயில்வே அதிகாரிகள், “ரயில் வருகைக்கு முன்பு தண்டவாளத்தை முறையாக ஆய்வு செய்வது வழக்கம். அப்போதுதான் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அந்த வகையில், திருவொற்றியூர் - விம்கோ நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, அங்கு கற்கள் மற்றும் ஸ்பேனர் போன்ற இரும்பு பொருள் ஒன்றை வைத்திருப்பதைப் பார்த்தோம். நல்வாய்ப்பாக எந்த வித அசம்பாவிதமும் நிகழ்வதற்கு முன் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள சிறார்கள் இங்கு கற்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர்கள் விளையாட்டிற்காகக் கற்கள் மற்றும் இரும்பு ஸ்பேனரை வைத்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாடிய சிறார்கள் யார்? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details