திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கிராமம் ஒன்றில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் குடும்பமாக வசிக்கின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை சுகந்தி என்ற தம்பதிக்கு 18 வயது நிரம்பாத இரண்டு மகன்கள் உள்ளனர்.
சின்னதுரை கொத்தனார் ஆகவும் அவரது மனைவி சுகந்தி தனியார் ஓட்டலில் ஊழியராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் சின்னத்துரை, சுகந்தி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது இளைய மகன் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் நேற்று மாணவன் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
காரின் வேகத்தை கண்டித்த சிறுவன்:அப்போது மதியம் சுமார் 2 மணி அளவில் சின்னதுரையின் இளைய மகன் மெயின் ரோட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நபர்கள் சிலர் காரில் வேகமாக சென்றுள்ளனர். இதை பார்த்த சின்னத்துரையின் இளைய மகன் அந்த காரை வழிமறித்து ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் ஊருக்குள் மெதுவாக செல்லுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வீடுபுகுந்து சிறுவனை தாக்கிய நபர்கள்:இதனால் ஆத்திரமடைந்து காரில் இருந்த நபர்கள் அங்கிருந்து சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதோடு அந்த சம்பவம் முடிவு பெற்ற நிலையில் சின்னத்துரையின் இளைய மகன் மாலை 3 மணியளவில் தனது வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த போது ஊரின் பின்பக்க வழியாக திடீரென பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் அரிவாள், பீர் பாட்டில் போன்ற ஆயுதங்களுடன் சின்னத்துரையின் வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையின் இளைய மகனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் வீட்டுக்குள் இருந்த காற்றாடி மற்றும் கண்ணாடி உளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். கும்பல் தன்னை தாக்குவதை அறிந்து, பதற்றம் அடைந்த சிறுவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடியுள்ள நிலையில் அந்த கும்பல் வீட்டின் அனைத்து அறைகளுக்கும் சென்று சிறுவனை துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர்.இந்நிலையில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள ரத்தினம் என்பவரது மகன் ஓடி வந்து வீட்டிற்குள் பார்த்துள்ளார். அப்போது சிறுவன் மயக்கம் அடைந்த நிலையில் அக்கும்பல் அங்கிருந்து கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது.
காப்பாற்றிய பக்கத்து வீட்டு நபர்:பின்னர் ரத்தினத்தின் மகன் சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதை கவனித்த கும்பல் மீண்டும் திரும்பி வந்து ரத்தனத்தின் வீட்டையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். கதவை திறக்கும்படி ரத்தினத்தின் வீட்டு கதவை அறிவாளால் கொத்தி உள்ளனர். இதில் அவரது கதவும் சேதம் அடைந்துள்ளது. பின்னர் ரத்தனத்தின் மருமகன் சின்னதுரையின் மகனை பாதுகாப்பாக வீட்டுக்குள் அடைத்து விட்டதால் கும்பலால் உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து கும்பல் கிளம்பி சென்றுள்ளது.
இதையும் படிங்க:சாட்சி அளிப்பவரின் சாதி, மத அடையாளம் குறிப்பிடப்படுவதை தவிர்க்ககோரி மனு...நவம்பர் 21ஆம் தேதி வழக்கு ஒத்திவைப்பு!