புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். அவரது பயணம் வெற்றிகரமாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியவை கட்சி தொடங்கி பல வருடங்கள் ஆகின்றது. எனவே புதிதாக கட்சி தொடங்கியவர்களை பார்த்து திமுக உட்பட அனைத்து கட்சிகளும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. யாரும் பயப்படவும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வரலாறு உள்ளது. கட்சி தொடங்கிய பலர் வென்றதாக சரித்திரம் இல்லை, தோற்றதாகவும் சரித்திரம் இல்லை.
அவருடைய கொள்கை, கோட்பாடுகள், பொதுமக்கள் செல்வாக்கு, அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது பொறுத்துதான். அது எவ்வாறு தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதை பொறுத்துதான் வெற்றி பெறுவது, தோல்வி அடைவதும் இருக்கும். அரசியலில் யாரும் எளிதாக வெற்றி பெற முடியாது. அதற்காக அவர்களை வரக்கூடாது என்று சொல்லவும் முடியாது.
சமீப காலமாக இந்தியாவில் கூட்டணி ஆட்சி முறை என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனித்து ஆட்சி செய்த மோடியே தற்போது கூட்டணி ஆட்சி தான் நடத்தி வருகிறார். அது போன்று இந்தியாவின் பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி முறை என்பது நடைமுறையில் உள்ளது. இதற்காக 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரும் என்று கூற முடியாது. ஒவ்வொரு கட்சிகளும் வெற்றி பெற்று அவர்கள் வாங்கக்கூடிய சீட்டை பொறுத்து தான் அது அமையும்.
அமெரிக்கா பயணத்திற்கு ஈபிஎஸ் விமர்சனம் : எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர். அவ்வாறு தான் செய்வார் விமர்சனம் தான் அவர் செய்வார். அந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் முதலமைச்சர் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு எவ்வளவு முதலீடு வந்துள்ளது, கொண்டு வந்த முதலீட்டால் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பது குறித்த அறிக்கையை வெளியிடுவார் இது தமிழக அரசின் கடமை.