தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை திருவள்ளுவனை படுகொலை செய்ய முயற்சி.. நாம் தமிழர் கட்சியை சந்தேகிக்கும் திருமுருகன் காந்தி! - Thirumurugan Gandhi

May 17 Movement Thirumurugan Gandhi: சீமான் அண்ணாமலையை நேரில் சந்தித்தால் ஆரத்தழுவுகிறார். ஆனால், வேறு எந்த தோழமை கட்சிகளோடும் இந்த நட்புறவு இருந்ததை நாங்கள் பார்த்ததில்லை என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 1:00 PM IST

சென்னை:தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னணி அம்பேத்கரிய செயல்பாட்டாளருமாகிய நாகை திருவள்ளுவனை படுகொலை செய்ய கூலிப்படையும், அரசியல் கட்சி பொறுப்பாளரும் முயன்ற தகவல்கள் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று இச்செயலைக் கண்டித்தும், பாதுகாப்பு கோரியும் மதிமுக, மமக, எஸ்.டி.பி.ஐ, தமிழ்ப் புலிகள் கட்சி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிட கழகம் மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய தமிழ் புலிகள் கட்சி முதன்மை செயலாளர் முகிலரசன், "தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக DGP அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளோம். தமிழ்ப் புலிகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் முரண் இருக்கிறது. நாங்கள் மதவாத சக்திகளை எதிர்த்து வருகிறோம். அதனால், நாம் தமிழர் கட்சிக்கும் எங்களுக்கும் கருத்தியல் முரண் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியர் மக்களை தூய்மை தொழில் செய்வதற்காக வந்தனர் என்று சீமான் கூறினார். அந்த பேச்சுக்கு பல ஆதாரங்களோடு நாகை திருவள்ளுவன் கண்டனம் தெரிவித்தார். ஏற்கனவே நடைபெற்ற இந்த சம்பவத்தின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நாம் தமிழர் கட்சி இதை செய்திருக்கலாம்.

எனவே தமிழக அரசு இந்த உரையாடல்களை ஆராய்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ரவுடி கும்பல் கட்சியினரோடு தொலைப்பேசியில் பேசும் ஆடியோ மற்றும் ஆதாரங்கள் வெளியாகி உள்ளது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, "தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனை கொலை செய்யத் திட்டமிடும் உரையாடல் நடந்த செய்தியை கேட்ட போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து மீளவே முடியாமல் இருக்கும் நிலையில், தற்போது தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

எனவே, தமிழ்நாடு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலிப்படை அதிகரித்து வரும் நிலையில், திமுக கருத்தில் கொண்டு சீர் செய்ய வேண்டும். குறிப்பாக கட்சியின் பொறுப்பாளர்கள் இவ்வாறு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. சீமான் அண்ணாமலையை நேரில் சந்தித்தால் ஆரத்தழுவுகிறார். ஆனால் எந்த தோழமை கட்சிகளோடும் இந்த நட்புறவு இருந்ததில்லை. நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருந்தால் கூட, நட்பாக இருந்ததை நாங்கள் பார்த்ததில்லை" எனத் தெரிவித்தார்.

அதையடுத்து பேசிய விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் குழந்தை அரசு, "ஆர்எஸ்எஸ் (RSS), பாஜக போன்ற சங்பரிவார் கும்பலால் கொலைகள், வன்முறைகள் அதிகரித்து உள்ளது. தற்போது நாம் தமிழர் கட்சியும் இந்த கொள்கை அடிப்படையில் செல்கிறது. ஏற்கனவே இருக்கும் பழைய சர்ச்சைகள் அனைத்தும் பொய் என்றால், நாங்கள் இதையும் கடந்து விடுவோம். ஆனால் இது உண்மை என்று இருந்தால் கண்டிப்பாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

பின்னர் மதிமுக நிர்வாகி ஜீவன் பேசும் போது, "நாளை சீமானுக்கும் ஆபத்து வரும் நிலை உள்ளது. கூலிப்படை தான் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். அவருடைய உயிருக்கும் ஆபத்து என்ற அடிப்படையில் தான் கூறுகிறோம்" எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சீமான் மீது வழக்குப்பதிய தீவிரம் காட்டும் சைபர் கிரைம் போலீஸ்.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details