சென்னை:தமிழகத்தில் மது விலக்கை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, விசிக மகளிர் அணி சார்பில் அக்.,2-ல் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடை கள்ளக்குறிச்சியில் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியாக உள்ள விசிக-வின் இந்த திடீர் அறிவிப்பு குறித்து கடந்த சில நாட்களாக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முருகன் மாநாடு விவகாரத்தில் திமுக மீது விசிகவினர் வைத்த விமர்சனம் தொடங்கி, மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பு வரை, திமுக கூட்டணிக்கு நெருக்கடி தரும் வகையில் விசிக-வின் செயல்பாடுகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து டெலிட் செய்த வீடியோ (Credit - @thirumaofficial X Account) மேலும், விசிக நடத்தும் இந்த மாநாட்டில் அதிமுக-வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் கூறியதும் கவனம் பெற்றது. இதுபோன்ற சூழலில், அமெரிக்கா பயணம் முடிந்து இன்று சென்னைக்கு வந்த முதல்வர் ஸ்டாலிடம், விசிகவின் மது ஒழிப்பு மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, '' விசிக மாநாடு குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து நான் விளக்கம் சொல்ல ஒன்றும் இல்லை'' என கூறிவிட்டார். முதல்வர் இவ்வாறு பதில் அளித்த சில மணி நேரங்களில் விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் மும்பு பேசிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், '' ஆட்சியிலும் பங்கு ..
அதிகாரத்திலும் பங்கு.. கடைசி மனிதனுக்கும் சனநாயகம் ! எளிய மக்களுக்கும் அதிகாரம்!..'' என குறிப்பிட்டுள்ள திருமாவாவன் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தும் வகையில் பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் பேசும் திருமாவளவன், ''தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை இதற்கு முன்பு யார் யார் வலியுறுத்தினார்களோ தெரியாது, ஆனால், 1999 இல் விசிக முதன்முதலில் தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது முன்வைத்த முழக்கமே, '' ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு'' என்பதுதான். அதிகார பகிர்வு வேறு, சீட் பகிர்வு வேறு... அமைச்சரவையில் பகிர்வு வேண்டும் என்பது பவர் ஷேர், கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர். அதிகாரத்தில் இடம் வேண்டும் என்றால் பவர் ஷேர் வேண்டும்'' என இவ்வாறு திருமாவளவன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். ஆனால், அந்த வீடியோ பதிவான சிறிது நேரத்திலேயே திருமாவளவனின் எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.
இதையும் படிங்க:அமெரிக்காவில் 7,618 கோடிக்கு 19 ஒப்பந்தங்கள்.. 11,500 பேருக்கு வேலைவாய்ப்பு.. 'இது ஒரு சாதனை பயணம்' - முதல்வர்
இருப்பினும், கூட்டணி ஆட்சி அதிகாரம் கேட்கும் திருமாவளவனின் இந்த பதிவு பூதாகரமாகியுள்ளது. இவ்வாறு அவ்வப்போது திமுக - விசிக இடையே புகைச்சலை கிளப்பும் சம்பவங்கள் நடந்து வந்தாலும், திருமாவின் சமீபத்திய பேச்சு திமுகவை ஆதரிக்கும்படியாகவே இருந்தது. அண்மையில் செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்று கலந்துகொண்ட திருமாவளவன், ''வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மதுக்கடைகளை மூடிவிட்டால் எத்தனை விஜய் வந்தாலும் தி.மு.க. தான் வெற்றி பெறும்'' என திருமாவளவன் உறுதியாக தெரிவித்தார்.
ஆனால், மதுவிலக்கு விவகாரத்தில் தீவிரம் காட்டியுள்ள திருமாவளவன், திமுக அரசை எவ்வாறு அணுகப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு வலுக்கிறது. கொள்கை ரீதியாக மது ஒழிப்பு மாநாடு நடத்திவிட்டு, மீண்டும் தேர்தல் அரசியலில் திமுகவுடன் விசிக கூட்டணி வைக்குமா அல்லது மதுக்கடைகளை ஒழிக்க அரசுக்கு தீவிர நெருக்கடி கொடுக்குமா என்ற கேள்விகளும் எழுகின்றன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்