தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலை விவகாரத்தில் தமிழக அரசிடம் கேள்வி கேட்பதா..? ஆளுநருக்கு கண்டனம் - திருமாவளவன் - THIRUMAVALAVAN CONDEMNS GOVERNOR

சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தாமல் வெளியேறிய ஆளுநர் ரவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் முதலமைச்சருடன் உள்ள புகைப்படம்
திருமாவளவன் முதலமைச்சருடன் உள்ள புகைப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 1:20 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன.6) முதலமைச்சரை சந்தித்த பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " முதல்வரை சந்தித்து 2025 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தோம், பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்தோம். கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு இந்த ஆண்டிற்கு தமிழக அரசு அண்ணல் அம்பேத்கர் விருதை அறிவித்துள்ளது. விசிக சார்பில் நன்றியை தெரிவித்துள்ளோம்.

ஆளுநர் உரை ஆளுநரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் வியப்பாக இருக்கிறது. அவர் ஆளுநராக பொறுப்பேற்ற நாளிலிருந்து திமுக தலைமையிலான இந்த அரசுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார். தொடர்ந்து அரசியலில் பரபரப்புக்கான ஒரு ஆளுமையாக தான் இருக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, நிகழ்ச்சி நிறைவு பெறும்போது தேசிய கீதம் இசைப்பதுதான் தமிழ்நாட்டு மரபு. இதைத்தான் கடைபிடித்தும் வருகிறோம். இது அனைவருக்கும் அறிந்த வெளிப்படையான உண்மை. ஆனால், ஆளுநர் இந்த மரபை மாற்றும்படி வற்புறுத்துவது ஏற்புடையதல்ல.

தேசிய கீதத்தை எந்த நிகழ்வாக இருந்தாலும் இறுதியாகத்தான் இசைத்து வருகிறோம் என்பது முதலில் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். அதையே இன்னும் அவர் அறிந்திராமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநரின் இந்த போக்கு தமிழ்நாடு சட்டமன்ற மரபை அவமதிக்கும் செயலாகும். அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.

இதையும் படிங்க:திட்டமிட்டே ஆளுநரை வெளிநடப்பு செய்ய வைத்திருக்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு..!

அண்ணா பல்கலை விவகாரம்:

பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு அரசியல் செய்து ஆதாயம் தேட வேண்டியது என்பது ஏற்புடையதல்ல. இது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக இருக்கிறது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை தங்களின் ஆதாய நோக்கிலே கையாளுவது வருத்தம் அளிக்கிறது மற்றும் அதிர்ச்சி அளிக்கிறது.

இனி புலனாய்வுத் துறையிடம் கேள்வி கேட்கலாம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இதைகுறித்து கேள்வி கேட்க வேண்டும் என்றால் சிறப்பு புலனாய்வுத் துறையிடம் கேள்வி கேட்கலாம். தமிழ்நாடு அரசின் மீதும் தமிழ்நாடு காவல்துறையின் மீதும் திரும்பத் திரும்ப கேள்வி கேட்பது அந்தப் பெண்ணுக்கு நியாயம் வாங்கி தருவதை விட அரசியல் ஆதாயம் தேடுவதாகத்தான் பார்க்கப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் கட்சி உடன் இருப்பதினால் எதிர்க்கட்சியைப் போன்று செயல்படாமல் தோழமை கட்சியாக தான் இருக்க வேண்டும். அதேபோல மக்கள் பிரச்சனையையும் மற்றும் நீதியை கூறுகின்ற கட்சியாகவும் இருக்கிறோம். ஆளும் கட்சிக்கு சுட்டிக்காட்ட வேண்டிய பிரச்சனையை சுட்டிக்காட்டி உள்ளோம். கண்டிக்க வேண்டிய பிரச்சனையை பொது வெளியில் கண்டித்து இருக்கிறோம். தோழமை கட்சிகளாக இருக்கிற எங்களுக்கு எங்களுடைய சுதந்திரம் எப்போதும் இருக்கிறது. எங்கள் சுதந்திரத்தை கூட்டணி என்ற பெயரில் ஆளுங்கட்சி தடுப்பதில்லை.

ஆளுநர் தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. இந்த ஆளுநர் பரபரப்பு அரசியல் செய்யக் கூடியவராக இருக்கிறார். அந்தப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஆளுமையாக அவர் இல்லை. அவர் சராசரி அரசியல்வாதியை போல செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஆர்.என். ரவி போன்ற ஆளுநர்கள் தான் பாஜக கட்சிக்கு தேவைப்படுகிறார்கள். திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் நெருக்கடி கொடுக்கிறார்கள்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details