சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பொதுக்கூட்டம் நடத்தி கட்சியின் கொள்கைகளை விவரித்தார். அப்போது தமது பேச்சின் முக்கிய அம்சமாக "கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு" என அறிவித்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிய விஜய் தமது பேச்சின் இந்த பகுதியை அணுகுண்டு என குறிப்பிட்டார்.
வி.சி.க.வின் முதல் ரியாக்ஷன்:விஜயின் இந்த பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முதல் ரியாக்ஷனாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது என மகிழ்ச்சி தெரிவித்த அவர், எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பட்டார்.
அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருப்பதாக விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல் எனவும் தமது பதிவில் கூறியிருந்தார்.
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் , "விஜய் தனது கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிக்க வேண்டுமென அவர் ஆசைப்படுவது அவருக்கான சுதந்திரம்! நம்பிக்கை! ஆனால், பரிணாமத்தில் பல்வேறு படிநிலை மாற்றங்களை கடந்த பின்னரே உச்சநிலை மாற்றத்தை எட்டமுடியும் என்பது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மை!" என குறிப்பிடுகிறார்.
இதையும் படிங்க:
"200 தொகுதிகளில் வெல்ல வேண்டும்" - 2026 க்கு டார்கெட் ஃபிக்ஸ் செய்த ஸ்டாலின்.
2026-ல் த.வெ.க. சின்னம் என்ன? விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள்
ஃபாசிசமா? பாயாசமா?: "அவங்க ஃபாசிசம்'னா நீங்க பாயாசமா ?" என ஆவேசமாக விஜய் கேள்வி எழுப்புவதை குறிப்பிடும் திருமாவளவன், அவர் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? என கேள்வி எழுப்புவதோடு, "பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பாஜகவை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம். ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு?" எனவும் திருமாவளவன் குறிப்பிடுகிறார்.
" கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்ற நிலைப்பாட்டை அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்க விஜய் கூறியுள்ளார். ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை. அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை என திருமாவளவன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"விஜய் கொள்கை வேறு.. எங்களது கட்சியின் கொள்கை வேறு" - சீமான் பளிச் பதில்!
அதிமுகவை முந்திக் கொள்ளும் அவசரம்:திமுக எதிர்ப்பும் திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே" அவரது அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது என குறிப்பிடும் திருமாவளவன், "பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல" ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. 'அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது எனவும் கூறுகிறார்.
விஜய்க்கு அரசியல் பாடம்:ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். ஒட்டுமொத்தத்தில், பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது. எனவும் திருமாவளவன் குறிப்பிடுகிறார்.
வி.சி.க.வில் குழப்பமா? :ஏற்கெனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதும், அதன் பின்னர் உதயநிதியை அவர் விமர்சித்ததும் திமுக கூட்டணியில் சலசலப்புக்கு காரணமாக அமைந்தது. இதன் பின்னர் திருமாவளவனும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என பேசிய வீடியோவும் அவரது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் கூட்டணியில் பிரச்சனை இல்லை என திருமாவளவன் முன்வந்து விளக்கம் அளித்தார்.
ஆட்சி அதிகாரத்தை வி.சி.க. விரும்புகிறதா?:அமைச்சரவை பதவி என்பதை திமுகவின் கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை திமுக 7 முறை ஆட்சி அமைத்த போதும் கூட்டணி ஆட்சி அமைத்ததில்லை என கூறிய அவர், எங்களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் தான் கூட்டணியில் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:
"உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கிறது தவெக" - விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
"பெரியார், அம்பேத்கர் படம் வைத்தால் மட்டும் போதாது".. தவெக மாநாடு குறித்து கி.வீரமணி கருத்து!
இதனிடையே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்களில் ஒருவரான சரவணன், தற்போதே கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கூட்டணி ஆட்சிக்கு தயார் என விஜய் அறிவித்திருக்கும் நிலையில், கட்சி தொடங்கிய காலம் முதலே கூட்டணியின் ஆதரவுடன் தான் திமுக ஆட்சியமைத்திருக்கிறது எனவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சரவணனின் கடிதம் அவரது சொந்தக் கருத்து என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.
விஜயின் பேச்சு மற்றும் திமுக கூட்டணி தொடர்பாகஈடிவி பாரத்துடன் பேசிய வி.சி.க. பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன், சாதி ஒழிப்புக்கான செயல் திட்டத்தை முன்னெடுக்காமல் தீண்டாமை ஒழிப்பைப் பற்றி மட்டும் விஜய் பேசியிருப்பது நெருடலாக இருந்தது என குறிப்பிடுகிறார். சாதி என்ற மலத்தை அகற்றாமல் தீண்டாமை என்ற நாற்றத்தை அகற்றுவேன் என்பது போல விஜயின் கருத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதிகாரத்தில் பங்கு எண்ணம் இருக்கிறது!:தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் "ஆட்சியில் அதிகாரம்" என்பதை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் பேசினால் தாக்கம் ஏற்படும் என கூறிய அவர், மற்ற கட்சிகள் பேசுவதால் தாக்கம் ஏற்படுவதில்லை என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற இடதுசாரிகள், மதிமுக கட்சியினர் ஆட்சியில் பங்கு என்ற யோசனைக்கு ஆதரவு தெரிவித்தனர் என கூறிய சிந்தனைச்செல்வன், இன்னும் பல அமைப்புகளுக்கு அதுபோன்ற எண்ணப்போக்கு இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் திமுக மற்றும் அதிமுக மத்தியில் அமையும் கூட்டணி அரசுகளில் பலமுறை அங்கம் வகித்திருந்தாலும், 1952ல் மாநிலம் உருவானது முதலே கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்ததே இல்லை. இத்தகைய வரலாறு மாறுமா? விஜயின் பேச்சு 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் புதிய முழக்கத்தை ஏற்படுத்துமா என்பதை வரும் நாட்கள் முடிவு செய்யும்.
இதையும் படிங்க:கூத்தாடி என்பதா?... “உச்சத்தை விட்டு வந்திருக்கிறேன்”... உதாரணம் சொன்ன விஜய்!
மீண்டும் அமையுமா மக்கள் நலக் கூட்டணி?:2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 41 இடங்களில் வென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நலக்கூட்டணி 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர் கொண்டது. 2015ல் மதிமுக மற்றும் இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டியக்கமாக தொடங்கப்பட்ட இந்த கட்சி பின்நாளில் தேமுதிக இணைந்ததாக மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்து தேர்தலை சந்தித்தது.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணியாக இக்கூட்டணி முன்னிறுத்தப்பட்ட நிலையில், 6.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் இதே கட்சிகள் 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த வாக்கு சதவீதம் 15 சதவீதத்தைத் தாண்டும். ஆனால் இந்த கூட்டணி கணக்கு அப்போது தோல்வியில் முடிவடைந்தது. முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட் இழந்தார். காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 86 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.