தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம்! திருமாவளவன் வலியுறுத்தல்! - THIRUMAVALAVAN ON VENGAIVASAL

வேங்கைவயல் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று திருமாவளவன் எம்பி கேட்டுக் கொண்டுள்ளார்.

திருமாவளவன் எம்பி பேட்டி
திருமாவளவன் எம்பி பேட்டி (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2025, 1:13 PM IST

சென்னை:வேங்கை வயல் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி சந்திரகுமார், எம்பிஏவாக பதவியேற்கும் நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின், சென்னை தலைமைச் செயகத்தில் திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரின் பதவி ஏற்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி சார்பில் நானும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தேன். இந்த இடைத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள், தமிழ்நாடு என்பது சமூகநீதிக்கான தேசம் என்பதை உறுதி செய்துள்ளது.

பெரியாரை தமிழ்நாட்டிற்கு எதிரானவர் என்று பிரிவினைவாத அரசியலை சங் பரிவார் அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன. திராவிட அரசியல் வேரை வெட்டி எரிய பெரியர் கொள்கைகளை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களையே பெரியாருக்கு எதிராக நிறுத்துகின்றனர். ஆனால் அவர்களால் எதையும் செய்ய இயலவில்லை. இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் ஆகியோரின் தொடர்ச்சியாக தான் பெரியார் விஸ்வரூபம் எடுத்தார்.

ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாததற்கு சங் பரிவார் அமைப்புகள் தான் காரணம். பாஜகவுன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்திருப்பது தேர்தல் புறக்கணிப்பு மூலம் அம்பலப்பட்டுவிட்டது. அதிமுக வாக்களார்கள் கூட சங் பரிவாருக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி அறிக்கை இறுதியானது அல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே குற்றப்பத்திரிக்கை இருப்பது அதிரச்சியாக உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை வேண்டும். பட்டியல் சமூக அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பான சட்டம் இயற்ற வேண்டும். OBC என அழைக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

பட்டியல் இனத்தவர்களை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வணிக வளாகங்களை அமைத்து தர வேண்டும். தமிழ்நாட்டில் சாதி வன்கொடுமைகளை அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details