புதுக்கோட்டை:நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இன்று புதுக்கோட்டை மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சியின் முதல் மேயராகவும், பெண் மேயராகவும் திலகவதி பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக லியாகத் அலி பதவி எற்றார்.
அவரை தொடர்ந்து மற்ற மாமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பங்கேற்று மாநகராட்சி மேயருக்கு, 5-1/4 அடி உயரம் கொண்ட செங்கோல், 51 பவுன் தங்கச் சங்கிலியை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்ட இருக்கையில் மேயர் திலகவதி செந்திலை அமர வைத்து, கூட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். முன்னதாக புதுக்கோட்டையில் 101.34 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் , புதிய பேருந்து நிலையம் கட்ட 18.90 கோடியில் அடிக்கல் நாட்டு விழா, ஐந்து வார்டுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணிக்கு 25.31 கோடியில் அடிக்கல் நாட்டினர்.
பருவ மழையை எதிர்கொள்ள தயார்:இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் பதவியேற்பு விழாவில் 145 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "தமிழக முழுவதும் உள்ள நகர் பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு ஆகாயத்தாமரை அகற்றப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் பருவ மழையை எதிர்கொள்ள வேண்டிய தயார் நிலையில் நகராட்சி நிர்வாகம் உள்ளது.
மழை பாதிப்புகள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கும், சேதமடைந்த மரங்களை அகற்றுவதற்கும், உணவு தயாரிப்பதற்கும் ஒரே இடங்களில் இல்லாமல் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.