"என்னவேணா சொல்லலாம்.. நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது" - கனிமொழி! கோயம்புத்தூர்: கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவையில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பது பிரச்சாரத்தில் தெரிகிறது.
இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்குச் சென்றிருக்கிறது. பாஜக மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நிச்சயமாக இந்த கூட்டணி இங்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் போட்டியிடும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகக் கூறிய அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “போதைப்பொருள் தடுப்புத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது.
குஜராத்தில் தான் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த துறைமுகம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார். கோவையில் பாஜக 60 சதவிகித வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “60 சதவீதம் வாங்கலாம், 90 சதவீதம் கூட வாங்கலாம். கனவு காண்பது அவரது உரிமை. ஆனால், வெற்றி எங்களுக்கு நிச்சயம்.
ஒரு பைசா கூட ஓட்டுக்குச் செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார். பின்னர் எதற்காக அவ்வளவு கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கினார்கள்? அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது.
முதலமைச்சர் திட்டங்களை நம்பித்தான் இங்கே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவார்கள்” எனத் தெரிவித்தார். மேலும், இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:தேர்தல் பணிகளில் குழந்தைகள் கூடாது.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்! - Children In Election Campaign