தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழக பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்" - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி! - NO DETENTION POLICY

தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது; தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (Cresits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2024, 9:06 PM IST

சென்னை:கல்வி உரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது; தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் - என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கு, இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாமல், நமது மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல, ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக அமையும். கல்வி தான் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் அடித்தளம். எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் திராவிட மாடல் அரசின் இலக்கு. இந்த இலக்கை எய்தி, இந்தியத் துணைக் கண்டத்திற்கே, தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் தொடர்ந்து விளங்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து தொய்வின்றி, நமது அரசு முன்னெடுத்துச் செல்லும்.' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியிருந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தது.

இதேபோன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி ரத்து என்பது மாணவர்கள் மீது தேர்வு குறித்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்டரிக் ரெய்மாண்ட் வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details