தேனி:தேனி என்.ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மற்றும் குமுதவள்ளி இவர்களுக்கு சரிகா(27) என்று மகள் இருக்கின்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ்குமார் என்பவருக்கும், சரிகாவிற்கும், தேனியில் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் திருமண சீராக சரிகாவின் பெற்றோர் 100 பவுன் நகை மற்றும் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை சீர்வரிசையாக வழங்கி உள்ளனர். திருமணத்தின் போது தனது கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த சரிகா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, பின் சென்னையில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தினேஷின் வீடு சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள நிலையில், அங்கு தினேஷின் தந்தை ரத்தினம் மற்றும் தாய் இந்திரா ஆகியோர் உடன் சரிகா இருக்கின்றனர். மேலும் இவர்களின் வீட்டிற்கு அருகே தினேஷின் அண்ணி அகிலா வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சரிகா அந்த வீடிற்கு சென்ற, ஒரு ஆண்டில் தனது மாமியார் இந்திரா தன்னை அவதூறாக பேசுவதாகவும், தான் வந்ததிலிருந்து இந்த குடும்பத்தில் நிம்மதியே இல்லை, என்றும் குடும்பத்தை விட்டு நீ போய் விடு என கூறுவதாகவும், மேலும் தன்னை பற்றி தன் கணவரிடம் உண்மைக்கு புறம்பாக கூறி தனது கணவருக்கும், தனக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தி வந்ததாக கூறுகிறார்.
மேலும் தனது கணவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும், இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தால், என் அண்ணியின் வீட்டு அருகே பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனக்கு பெண் கொடுப்பதாக இருப்பதாக கூறி தன்னை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறிவாதவும் சரிகா தெரிவித்தார். இதனால் தனக்கும் தன் கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, தினேஷ் என்னை அடித்து துன்புறுத்துவதும், கழுத்தை நெரித்து காயப்படுத்துவதும், போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும், தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், தெரிவித்துள்ளார்.
மேலும் தன் தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கி வரச் சொல்லி வற்புறுத்தியதாகவும், இல்லை என்றால் தன்னையும் தன் குழந்தையும் விட்டுவிட்டு நான் வெளிநாடு சென்று விடுவேன் என கணவர் மிரட்டியதாக கூறுகிறார். இந்நிலையில் எனது கணவரின் அண்ணி அகிலாவும், தன்னை துன்புறுத்துவதாகவும், உன் கணவர் நான் என்ன சொன்னாலும் செய்வார் என்றும், நான் சொல்வதை நீ செய்யவில்லை என்றால் உன்னால் இந்த வீட்டில் வாழ முடியாது என தன்னை மிரட்டுவதாகவும், சரிகா காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.