தேனி:தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரத்திற்கும் பாசனத்திற்கும் மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை அணைகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 115.78 அடியாக இருந்தது.
இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து 6 கன அடியில் இருந்து 226 கன அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 8 மணி நேரத்தில் 11 அடி உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. அணைக்கு நீர்வரத்து 226 கன அடியாக உள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.