தேனி:2024 நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றுடன் நிறைவடைந்தது. ஆகவே, அந்தந்த அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக களம் காணும் 21 தொகுதிகளில் ஒன்றான தேனி தொகுதியில் போட்டியிட, திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்காக தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்க தமிழ்ச்செல்வன் வந்தார்.
முன்னதாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கூட்டணி கட்சித் தலைவர்கள், ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஊர்வலமாக வந்தனர். பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்க தமிழ்ச்செல்வன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். தங்க தமிழ்ச்செல்வன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.