தூத்துக்குடி:தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதே எல்லைக்குட்பட்ட காவலர் ஒருவரது வீட்டிலும் நடைபெற்றுள்ள திருட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் நடந்துள்ள இருவேறு கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் நாகப்பட்டினம் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி புனிதா, சென்னையில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணமான நிலையில், மற்றொருவருக்கு வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுகுமார் கடந்த மே 10ஆம் தேதி தனது குடும்பத்தைப் பார்க்க சென்னை சென்றுள்ளார். தூத்துக்குடி சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த அமுதா என்ற பெண், இவர்களது வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அமுதா இன்று (மே 18) காலை வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்வதற்காக வீட்டு முன்பக்க கதவை திறந்த போது, உள்ளே கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள சுகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர் தென் பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் துறையினர், மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளைச் சம்பவம் குறித்து சோதனை நடத்தினர். தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த சோதனையில், சுகுமார் மகள் திருமணத்திற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில், காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த கொள்ளை கும்பல், வீட்டின் முன்பக்க கிரில் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.