கோயம்புத்தூர்: வாகனத்தை மோதி விட்டு மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவியை துரத்தி சென்று இளைஞர் செய்த தகாத செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை பாலக்காடு சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த சிறிய குழியில் இருசக்கர வாகனம் இறங்கி நிலை தடுமாறியது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு இளைஞரின் இரு சக்கர வாகனத்தின் மீது மாணவியின் வாகனம் மோதியது.
இதனையடுத்து இளைஞரிடம் லேசாக சிரித்தபடி மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு மாணவி சென்றுள்ளார். இந்ந நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
சுமார் ஒரு கி.மீ தூரம் வரை மாணவியின் பின்புறம் சென்று மாணவியின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேச்சு கொடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த இளைஞர் மாணவிக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க:ஈசிஆரில் பெண்களுக்கு நடந்த திக்திக்.. திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் அட்டூழியம்..
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து சென்று குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த நபர் கோவை புதூர் பகுதியை சேர்ந்த முகமது ஷெரீப் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இரு சக்கர வாகனத்தில் தெரியாமல் மோதி விட்டு மன்னிப்பு கேட்ட மாணவியை ஒரு கிலோ மீட்டர் வரை பின்தொடர்ந்து சென்று முத்தம் கொடுத்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மாணவி துணிந்து காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து அந்த இளைஞரை சிறைக்கு அனுப்பியிருப்பது தக்க பதிலடியாக உள்ளது.