தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை சாலைகளில் மழை நீரை வடிக்கும் பணி தீவிரம்...உண்ணாமல் ஓய்வெடுக்காமல் பணியாற்றும் ஊழியர்கள்! - DRAINING RAINWATER

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் வடதமிழக மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை சாலைகளில் மழை நீரை வடிக்கும் பணி
சென்னை சாலைகளில் மழை நீரை வடிக்கும் பணி (Image credits-credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 4:07 PM IST

சென்னை:தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் வடதமிழக மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல பகுதிகளை மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் சென்னை பெருநகர மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தேனாம்பேட்டை அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஏழுமலை, "விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து உள்ளேன். மழை பெய்து அதிக தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது ஆங்காங்கே முழங்கால் அதற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. நான்கு ஐந்து நாட்களாக மழை பெய்து வருகிறது. எனினும் நேற்று இரவில் இருந்து மழை அதிகமாக பெய்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க:சென்னை கனமழை; ரயில் சேவையில் தடையில்லை - சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

அண்ணா மேம்பாலத்தில் இருந்து மெரினா நோக்கி இரண்டு மோட்டார் ஒரு டிராக்டர் வைத்து சூழ்ந்துள்ள மழை நீரை அப்புறப்படுத்தி வருகிறோம். காற்றும் மழையும் சேர்ந்து பெய்து வருகிறது. மழை நின்றால் தான் எங்களுடைய வேலையும் நிற்கும். நாங்களே மழையில் நனைந்து கொண்டு சாப்பிடாமல் கூட வேலை செய்து கொண்டிருக்கிறோம் " என்றார்.

நம்மிடம் பேசிய இன்னொரு ஊழியரான மகிமை தாஸ், "மழை நான்கு நாட்களாக பெய்து வருகின்ற நிலையில் ஆங்காங்கே மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். காலையில் இந்த பகுதியில் தண்ணீர் அதிகமாக இருந்தது. அதனை அகற்றி விட்டதால் தற்போது தண்ணீர் தேக்கம் குறைந்துள்ளது. மழை நின்றால் தண்ணீர் வடிந்து விடும். மழை நின்றாலும் நகரின் வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கிய பகுதியில் மழை நீரை அகற்றுவதற்காக செல்வோம்" என்றார்.

தேனாம்பேட்டையை சேர்ந்த செல்வராஜ், "என்னுடைய மனைவியை வேலையில் இருந்து அழைத்துச் செல்ல வந்தேன். ஆனால் திரும்பிச் செல்வதற்குள் பல சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது . சாலையில் மழை நீர் சூழ்ந்திருப்பதால் எது பள்ளம், மேடு என்பது தெரியவில்லை. மழை நீர் குறைந்த இடத்தில் பாதை இருக்கிறதா என்று சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். வீட்டிற்கு செல்வதற்கு எவ்வளவு மணி நேரம் ஆகும் என்று தெரியவில்லை. சாலைகளில் முழங்கால் அளவில் தண்ணீர் உள்ளது. தெருக்களில் அதிகமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. மிகவும் சிரமமாக இருக்கிறது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்


ABOUT THE AUTHOR

...view details