கன்னியாகுமரி:விஞ்ஞான உலகின் ஆணிவேராக செயல்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேலக்காட்டுவிளை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்த நாராயணன்.
அக்கிராமத்தைச் சேர்ந்த வன்னியப் பெருமாள் - தங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தவர். வன்னிய பெருமாளுக்கு மொத்தம் 4 மகன்கள், 2 மகள்கள். மூத்த மகனான நாராயணன் தனது சிறு வயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். குறிப்பாக படிப்பதற்காக அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் நாராயணன்.
நாராயணன் குறித்து உறவினர்கள், ஆசிரியர்கள் பேட்டி (ETV Bharat Tamilnadu) பள்ளிப்படிப்பு முதல் பி.ஹெச்டி வரை: மேல காட்டுவிளையில் உள்ள அரசுப் பள்ளியில் தனது தொடக்கப் கல்வியை முடித்தார். அதை தொடர்ந்து ஆதி காட்டுவிளையில் உள்ள சியோன்புரம் சிஎஸ்ஐ அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பை முடித்தார். பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றிருந்த அவர், பின்னர் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்தார். தொடர்ந்து இஸ்ரோவில் பணியில் சேர்ந்த அவர், அஞ்சல் வழியில் படித்து இளநிலை பொறியாளர் பட்டமும் பெற்றார்.
அதன் பிறகு கோரக்பூர் ஐஐடியில் கிரைரோஜெனிக் இன்ஜினியரிங் பிரிவில் எம்டெக் படித்து அதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் பிஎச்டி பட்டமும் பெற்றுள்ள நாராயணனுக்கு கவிதா ராஜ் என்ற மனைவியும் அனுபமா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
குடும்பத்தினருடன் நாராயணன் (ETV Bharat Tamilnadu) டெக்னீசியன் டூ இஸ்ரோ தலைவர்: தற்போது இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி நாராயணன் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் திரவ உந்து விசை எரிவாயு செயற்பாட்டு மையத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார் 1984-ல் இஸ்ரோவில் டெக்னீசியனாக நாராயணன் தனது பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு ராக்கெட் உந்துவிசை பிரிவில் நிபுணத்துவம் பெற்றார்.
25 சி கிரோயோஜெனிக் இன்ஜின் திட்ட குழுவில் இடம்பெற்று அதை வழி நடத்தி வந்தார். கிரையோஜனிக் இன்ஜின் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க விஞ்ஞானியாக செயல்பட்ட நாராயணன், கிரோயோஜெனிக் எஞ்சின் தொழில்நுட்பத்தை கற்பதற்காக இந்திய அரசு ரஷ்யாவிற்கு அனுப்பிய விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்தார்.
இதுபோன்று பல்வேறு திறமைகளை பெற்றிருந்த விஞ்ஞானி நாராயணன் தற்போது இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக அவர் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான மேலக் காட்டுவிளை பகுதியில் வசிக்கும் உற்றார் -உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், நாராயணன் இஸ்ரோ தலைவராகியிருக்கும் செய்தியை கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
அண்ணன் இருந்திருந்தால்..அரசு பள்ளியில் படித்து நாட்டின் மிக உயரிய பதவியில் நாராயணன் அமர்ந்திருப்பது குறித்து மேலக்காட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பெருமிதம் பெரும் அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் இடத்தில் கால்பதிக்க போகும் விஞ்ஞானி நாராயணன் குறித்து நாராயணனின் சித்தப்பா (தந்தை உடன் பிறந்த சகோதரர்) நாராயண பெருமாள் ஈடிவி பாரத்திடம் கூறும்போது, "ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நாராயணன் எங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் நன்றாக படியுங்கள் என்று கூறுவார். எப்போது பார்த்தாலும் படிக்கும்படி சொல்வார். அவர் இன்று இந்த நிலைமைக்கு வந்திருப்பது வேறு உலகத்திற்கு சென்றதை போல் உள்ளது. உறவினராக மகிழ்ச்சியாக இருக்கிறது எங்கள் அண்ணன் இருந்திருந்தால் இதை விட அதிக மகிழ்ச்சியாக இருந்திருப்பார்" என்று ஆனந்த கண்ணீர் மல்க கூறினார்.
அரசுப் பள்ளியில் படித்து சாதனை: நாராயணன் படித்த அரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியை வைஸ்லின் பினோமிலா கூறும் போது." நாராயணன் எங்கள் பள்ளியில் படித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. குறிப்பாக அரசு பள்ளியில் படித்து நாட்டின் உயரிய பதவிக்கு செல்கிறார். அரசு பள்ளி என்றாலே எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். ஆனால் அரசு பள்ளியில் படித்தாலும் சாதனை படைக்கலாம் என்பதை நாராயணன் சார் நிரூபித்துள்ளார். அவர் படித்த பள்ளியில் நான் வேலை பார்ப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது." என்று கூறினார்
பள்ளிக்குப் பெருமை: நாராயணன் பயின்ற சியோன்புரம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கிளாரா பூரண ஞான்சி கூறும்போது, "நாராயணன் சார் எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். பத்தாம் வகுப்பில் அவர் முதலிடம் பிடித்தார். அவர் இஸ்ரோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எங்கள் பள்ளிக்கு பெருமையாக இருக்கிறது. அவர் படித்த பள்ளியில் நாங்கள் பணிபுரிவதும் எங்களுக்கு பெருமையாக உள்ளது." என பெருமிதம் பொங்க கூறினார்.
கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு:நாராயணின் சித்தப்பா மகன் செல்வகுமார் கூறும்போது, "அண்ணன் எப்போதுமே இஸ்ரோவில் மிகவும் துடிப்பாக வேலை பார்ப்பார். தான் பார்க்கும் வேலையில் முழு ஆர்வத்தோடு ஈடுபடுவார். மிகவும் திறமையானவர். அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இதை பார்க்கிறேன்.குறிப்பாக அரசு பள்ளியில் படித்து சாதிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அவர் இஸ்ரோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எங்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமையாக உள்ளது என கூறினார்
பெற்றோர், உற்றோருடன் நாராயணன் (ETV Bharat Tamilnadu) தம்பிக்காக லட்சியத்தை தள்ளிப் போட்டவர்:நாராயணனின் தந்தை வன்னிய பெருமாள் தேங்காய் வியாபாரம் பார்த்தாலும் வீட்டில் மொத்தம் ஆறு குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதால் பொருளாதார ரீதியாக சற்று தடுமாறி உள்ளார். ஒரு கட்டத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோது நாராயணனும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணனும் ஒரு வருட வித்தியாசத்தில் அடுத்தடுத்து உயர் கல்விக்கு செல்ல இருந்தனர்.
நாராயணன் டிப்ளமோ முடித்து விட்டு இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற ஆசையோடும் லட்சியத்தோடும் இருந்தார். அதேபோல் அவரது தம்பி கோபாலகிருஷ்ணனும் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். அப்போது வன்னிய பெருமாள் இருவரிடமும். 'யாராவது ஒருவரை மட்டும் தான் படிக்க வைக்க முடியும். யார் படிக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்' என கூறியுள்ளார்.
உடனே நாராயணன் தனது தம்பிக்காக விட்டுக் கொடுத்து வேலைக்கு சென்றுள்ளார். சென்னை, திருத்தணி, ராணிப்பேட்டை போன்ற இடங்களில் சுமார் இரண்டரை ஆண்டுகள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் நாராயணன் வேலை பார்த்து கொண்டே தனது தம்பி கோபாலகிருஷ்ணனை இன்ஜினியரிங் படிக்க வைத்து குடும்பத்தையும் கவனித்துள்ளார்.
2015 இல் நாராயணனை கௌரவித்த அப்போதைய கேரள ஆளுநர் (ETV Bharat Tamilnadu) இருந்தாலும் லட்சியத்தை அடைய வேண்டும் என்பதில் நாராயணன் தீவிரமாக இருந்தார். 1984 இல் இஸ்ரோவில் டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பித்தார். அவருக்கு வேலையும் கிடைத்தது. இஸ்ரோவில் டெக்னிசியனாக உள்ளே நுழைந்தாலும் கூட இன்ஜினியரிங் பிரிவில் இணைந்து ராக்கெட் ஏவுவதில் சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் அவரது முழுநேர கனவாக இருந்தது.
ஆனால் அதற்கு இன்ஜினியரிங் தகுதி வேண்டும். இன்ஜினியரிங் தகுதி இல்லாமல் ராக்கெட் ஏவும் பணிக்கு செல்ல வேண்டுமென்றால் 8 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும். எனவே வேலை பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக இன்ஜினியரிங் படிப்பபை நாராயணன் முடித்தார். அதன் பயனாக டெக்னீசியனாக பணியில் சேர்ந்த நான்கு வருடத்தில் அவருக்கு இன்ஜினியராக இஸ்ரோவில் பதவி உயர்வு கிடைத்தது. அதன் பிறகு கிரோஜினிக் பிரிவில் நுழைந்து பல்வேறு சாதனைகளை புரிந்து இன்று இஸ்ரோ தலைவராக உருவெடுத்துள்ளார்.
விருதுகள்:தமது சிறந்த பணிக்காக ஐஐடி கோரக்பூரின் வெள்ளி பதக்கம், இந்திய விண்வெளி சங்கத்தில் தங்கப்பதக்கம், என்டிஆர்எஃப் அமைப்பில் தேசிய வடிவமைப்பு விருது என பல்வேறு விருதுகளை நாராயணன் பெற்றுள்ளார்.