சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIC) சி.சி.டி.என்.எஸ் அமைப்பில் நேரிட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் வழக்கு குறித்து பேட்டி அளித்ததும் தவறல்ல என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை(எஃப்ஐஆர்) வெளியானது. எஃப்ஐஆரில் இடம் பெற்றுள்ள மாணவியின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களும் தெரியவந்தது விதியை மீறிய செயல் என்று கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம், தேசிய மகளிர் உரிமை ஆணையம் ஆகியவை அதிருப்தி தெரிவித்திருந்தன.
எஃப்ஐஆர் எப்படி வெளியானது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக சட்ட அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, சென்னை பெருநகர காவல் துறை துரிதமாக உரிய நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளியை கைது செய்தது குறித்தும், இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளவாறு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, இவ்வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை பொது வெளியில் வெளிவந்ததற்கு, இந்த அறிக்கைகளை இணைய வழியில் நிர்வகிக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIC) சி.சி.டி.என்.எஸ் அமைப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம் என்பதும், காவல்துறை காரணம் அல்ல என்பதும் நீதிமன்றத்தில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு பற்றிய சென்னை காவல்துறை ஆணையரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை, அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் இதில் எந்த தவறும் இல்லை எனவும் உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த உள்ளோம்,”எனக் கூறியுள்ளார்