திருநெல்வேலி: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மர்ம மரண வழக்கு பல கட்ட விசாரணைகளை தாண்டி திருப்பம் ஏற்படாமல் சென்று கொண்டிருக்கிறது. ஜெயக்குமார் எழுதியதாக வெளியான கடிதங்களில், தனக்கு ஆபத்து இருப்பதாக கூறி குறிப்பிட்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதிலும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஒருவேளை குடும்பத்தினரின் சதியால் ஏதேனும் நடந்திருக்குமா என்ற சந்தேகத்தில் ஜெயக்குமாரின் மகன்களிடமும் விசாரித்தனர்.
மேலும், இரண்டு மகன்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு மகன் மும்பை எண்ணுக்கு அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது. அதேபோல அந்த எண்ணில் இருந்தும் தொடர்ச்சியாக அவருக்கு போன் கால் வந்துள்ளது. எனவே, அந்த நபர் யார்? ஜெயக்குமார் கொலைக்கும், மும்பை போன் காலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என விசாரித்து வருகின்றனர்.
அத்துடன், நெல்லை எஸ்பி சிலம்பரசன் கடந்த ஒரு வாரமாக கரை சுத்து புதூரில் முகாமிட்டு ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் ஜெயக்குமாரின் செல்போன்கள் மட்டுமே பெரிய தடயமாக இருக்கலாம் என கருதும் போலீசாருக்கு காணாமல் போயிருக்கும் அந்த இரண்டு செல்போன்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், ஜெயக்குமார் பயன்படுத்திய செல்போன் எண்களை ஆய்வு செய்து கடைசியாக அவர் யார் யாருக்கெல்லாம் பேசினார் என்பதை ஆய்வு செய்தனர். அதிலும் துப்பு துலங்கவில்லை.
இளம்பெண்ணுடன் தொடர்பு:இதற்கிடையே ஜெயக்குமாருக்கு திசையன்விளை அடுத்த முட்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணையும் போலீசார் நேரில் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் ' 'ஜெயகுமாருடன் தொடர்பில் இருந்தது உண்மைதான். ஆனால், அவரது கொலை பற்றி எதுவும் தெரியாது'' என கூறியதாக சொல்லப்படுகிறது.
தடய அறிவியல்: இதையடுத்து, ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட தோட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் அவரது செல்போன்கள் கிடைக்குமா என்பதை ஆய்வு செய்ய கிணற்றை தூர் வாரிய போது பழைய கத்தி ஒன்று மட்டும் சிக்கியது. அதோடு, உடல் மீட்கப்பட்ட இடத்தில் இருந்த இரும்பு கம்பிகள், உடல் எரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஓலைகள், மட்டைகள் உட்பட பல்வேறு சிறிய சிறிய பொருட்களை சேகரித்து திண்டுக்கல் சிறப்பு தடய அறிவியல் துறையினர் ஆய்வுக்குட்படுத்தினர். பின்னர் அதன் அறிக்கையை விசாரணை அதிகாரிகளிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள சாராம்சம் குறித்து காவல்துறை வெளிவிடாமல் வைத்துள்ளனர்.
மேலும், ஜெயக்குமாரின் மகன்கள் மீது சந்தேகம் குறையாத நிலையில் அவரது இரண்டு மகன்களும் விசாரணை வளையத்திற்குள் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர். தங்களை கேட்காமல் வெளியூர் எங்கும் செல்ல வேண்டாம் என மகன்களுக்கு போலீசார் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதுதவிர, இவ்வழக்கில் சில அரசியல் தலையீடு இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: கிணற்றில் கிடைத்த அந்த தடயம்...ஜெயக்குமார் வழக்கில் என்னதான் நடக்கிறது?