நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று (பிப்.23) உதகமண்டலத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சிபிசிஐடி ADSP முருகவேல் தலைமையிலான போலீசாரும், அரசு வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த விசாரணையில் கடந்த வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன், சம்பவம் நடைபெற்ற கோடநாடு பங்களாவை நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என மனுத் தாக்கல் செய்தார். இதற்கு அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
மேலும், கோடநாடு பங்களாவை நீதிமன்றத்தின் மூலம் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்த அரசு வழக்கறிஞர், ஏற்கனவே சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி, நிபுணர் குழு கோடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம் என்றும், அதனை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சாட்சியங்களை அழிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க:தஞ்சாவூரில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த காதல் ஜோடி மரணம் - போலீசார் தீவிர விசாரணை!