சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் தேசிய மகளிர் ஆணையத்தின் இருநபர் குழு 30ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் தமிழக போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கை மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு விசாரிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தவிர இந்த வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் ஏற்கனவே வெளியிட்ட உத்தரவில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கொடும் குற்றச் செயலுக்கு வன்மையான கன்னடங்களை தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க அவருடன் துணை நிற்கின்றோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்,"எனவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கு இரண்டு பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் இன்று அமைத்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. இப்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக உண்மை கண்டறியும் குழுவை மகளிர் ஆணையத்தின் தலைவி விஜயா ரஹத்கர் அமைத்துள்ளார்.
அதன்படி தேசிய மகளிர் உரிமை ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் டிஜிபியும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான பிரவீண் தீக்சித் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யும். இந்த குழுவினர் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள், அண்ணாபல்கலைக்கழக அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவி, மாணவியின் குடும்பத்தினர், உண்மை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோரையும் சந்தித்துப் பேசும். இந்த குழு வரும் 30ஆம் தேதி சென்னைக்கு செல்கிறது,”எனக் கூறப்பட்டுள்ளது.