சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் அண்ணா பல்கலைகழகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கானது தமிழகத்தையே அதிர வைத்து உள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவும் விசாரணை மேற்கொள்கிறது. மேலும் இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் மம்தா குமாரி, பிரவீன் ஷிவானிடே ஆகியோரை கொண்ட இருநபர் குழு இந்த வழக்கு குறித்து உண்மை கண்டறியும் பணியில் ஈடுபடும் என்று தேசிய மகளிர் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த அதிகாரிகள் நேற்று சென்னைக்கு வந்ததனர்.
இதையும் படிங்க:"பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் நிற்பேன்" - தவெக விஜய் கைப்பட கடிதம்!
இதனைத்தொடர்ந்து இன்று அவர்கள் இருவரும் அண்ணா பல்கலைகழகத்திற்கு வருகை புரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் எந்த நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்தார்? என்றும் விசாரிக்கின்றனர்.
மேலும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்தும், அவற்றில் பதிவான காட்சிகள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் எத்தனை சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாகவும் தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அண்ணா பல்கலைகழக பேராசிரியர்கள், அதிகாரிகள், மாணவிகளிடம் தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தகட்டமாக மாணவியின் அடையாளம் வெளியானது எப்படி? வழக்கு விசாரணை எந்தளவில் உள்ளது என விசாரணை அதிகாரி மற்றும் காவல் உயரதிகாரியிடம் தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.