திருச்சி: திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1977 ஆம் ஆண்டு 41 மதகுகளுடன் கட்டிமுடிக்கப்பட்ட கதவணைகளை முழுமையாக பழுது பார்த்து, சீர்செய்யும் பணியில் நீர்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி நீர் மேலணையை வந்தடையும் இடம் காவிரி - கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. இந்நிலையில், முக்கொம்பு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1836 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 'ஆர்த்தர் காட்டன்' என்ற பொறியாளர் 45 மதகுகளுடன் கூடிய கதவணையை கட்டி முடித்தார்.
அதேபோல, அதன் அருகே கடந்த 1977ஆம் ஆண்டு, காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அன்றைய முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி 41 மதகுகளுடன் கதவணையை கட்டிமுடித்தார். இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆர்த்தர் காட்டன் கட்டிய கதவணை, 182 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உடைந்து சேதம் அடைந்தது.
அதில், 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பிறகு, அதன் அருகிலேயே கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் புதிய கதவணை கட்டிமுடிக்கப்பட்டு, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
காவிரி நீர்:வரும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டு முக்கொம்பு மேல் அணைக்கு தண்ணீர் வரும்பட்சத்தில், அதனை சாகுபடி பாசனத்திற்காக தடையின்றி திறக்க வேண்டும். அதற்கு கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளையும், அதில் உள்ள கதவணைகளையும், கோடை காலத்திலேயே பழுது நீக்கி வைத்து அணையின் கட்டமைப்பை உறுதி செய்வது அவசியமாக உள்ளது.
ஒரு வினாடிக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றும் வகையில் காவிரி ஆற்றின் கதவணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம், டெல்டா பகுதியில் 12 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதற்கு எவ்வித தடையும் ஏற்படாத வகையில், முக்கொம்பு அணையில் பராமரிப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.