சென்னை: கோவை வனப்பகுதியை ஒட்டிய யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் சதிஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய வனத்துறை வழக்குகளுக்கான சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கு சம்மந்தமாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், "2023ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு நவம்பர் வரை சட்ட விரோதமாக மண் எடுத்தவர்களுக்கு 119 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மண் அள்ளும் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இது சம்மந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. இதுமட்டும் அல்லாது, தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், "கோவை மதுக்கரை, கரடி மடை உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் கனமீட்டர் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி அறிக்கையை சுட்டிக்காட்டி இந்த மண்ணை கொண்டு செல்ல 20 ஆயிரம் முறை லாரிகள் இயக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது குறித்து முறையாக புலன் விசாரணை நடத்தப்பட வில்லை" என்று அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், "செங்கல் சூளைகளை மூடும் போது அங்கிருந்த மண் மற்றும் செங்கற்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, அவை பறிமுதல் செய்யப்பட்டதா?" எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதன் தொடர்ச்சியாக, "இப்பகுதிகளில் எடுக்கப்பட்ட மண் யாருக்கு அனுப்பப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? தோண்டப்பட்ட குழிகளை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எனவும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், கண்காணிப்பு முறையாக இல்லை" என கடும் அதிருப்தி தெரிவித்தனர்.