தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - MADRAS HIGH COURT

கத்தோலிக்க திருச்சபைக்கு தானமாக வழங்கப்பட்ட 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்தது குறித்து விசாரணை நடத்தி, அவற்றை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MADRAS HIGH COURT
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 4:53 PM IST

சென்னை: சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயத்துக்கு 1915ஆம் ஆண்டு 75 ஏக்கர் நிலம், மத சேவை செய்ய தானமாக வழங்கப்பட்டது.

அது தானமாக வழங்கப்பட்ட நிலம் என்பதால் அதனை விற்க முடியாது. இருப்பினும் அதனை சட்டவிரோதமாக விற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல, இரும்புலியூர் கிராமத்தில் உள்ள 53 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம், வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு மோசடியாக விற்கப்பட்டுள்ளதாகவும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 1.55 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தேவாலயம் ஆக்கிரமித்துள்ளதாகவும்" அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, "மயிலாப்பூர் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகள் இப்படி சட்டவிரோதமாக விற்ற நிலங்களின் தற்போதைய மதிப்பு மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி எனவும், இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த நிலங்கள் விற்பனை குறித்து விசாரணை நடத்தவும், நிலங்களை மீட்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிதம்பரம் கோயில் நிலம் விவகாரம்: கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு அனுமதி!

இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி, கத்தோலிக்க திருச்சபைக்கு தானமாக வழங்கப்பட்ட 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்தது குறித்து விசாரணை நடத்தி, அவற்றை மீட்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details