சென்னை: தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம், புழல் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகா, போலி சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக குற்றம் சாட்டி ராஷியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மல்லிகா, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என போலி ஜாதி சான்றிதழ் அளித்து, பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆகவே, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று ராஷியா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மல்லிகா, பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட உரிமை இல்லை. இது சம்பந்தமாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரசு அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என தெரிவித்தார்.