சென்னை: சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகின. இதில் மத்தியில் பாஜக உள்பட எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240 தொகுதிகளை மட்டுமே பாஜகவால் கைப்பற்ற முடிந்தது.
அதேநேரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது. ஆட்சியமைக்கத் தேவையான 272க்கு அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளதால், பாஜக தலைமையிலான இக்கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
பாஜகவுக்கு தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு பறிபோனது ஒருபுறம் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜக கட்சியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 07) டெல்லியில் நடைபெற உள்ளது.
இக்ககூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றனர். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், வானதி சீனிவாசன், தேவநாதன் ஆகிய தலைவர்கள் சென்னையில் இருந்து நேற்றிரவு (ஜூன் 06) விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
டெல்லி புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தொண்டர்களுக்கான இயக்கமாக, வரலாற்று சிறப்புமிக்க இயக்கமாக அதிமுகவை கட்டிக் காத்து வந்தனர்.