சென்னை: சென்னையில் அதிகாலையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சென்னை கொடுங்கையூர் முல்லை நகரில் இன்று அதிகாலை காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிகாலை 4.32 மணி அளவில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் இருந்த இரண்டு நபர்களில் ஓட்டுநர் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த நபரை இறக்கி விசாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த காரில் இருந்த ஓட்டுநர் காரை எடுத்துக் கொண்டு அதிவேகமாக தப்பிச் சென்றுள்ளார்.
உடனே இந்த தகவலை அங்கு பணியிலிருந்த காவலர் நாதமுனி என்பவர் சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனடியாக இந்த தகவலை சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அப்போது முல்லை நகர் வியாசர்பாடி பிரதான சாலையில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரின் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து செய்தி கிடைத்தவுடன் அந்த வழியாக தப்பி வந்த புதுச்சேரி பதிவு எண் கொண்ட காரை அடையாளம் கண்டு நிறுத்திய போது அந்த கார் நிற்காமல் அதிவேகமாக கடந்து சென்றுள்ளது.
அதிவேகமாகச் சென்ற காரை பின் தொடர்ந்த காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் அந்த வாகனம் வியாசர்பாடியில் உள்ள பாழடைந்த பிஎஸ்என்எல் குடியிருப்பு வளாகத்தின் உள் வேகமாக சென்று அதிகாலை 4.50 மணியளவில் நின்றுள்ளது.
இதையும் படிங்க:"காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டருக்கு சம்போ செந்தில் தான் காரணம்" - பாலாஜியின் தாய் பகீர் குற்றச்சாட்டு!