கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சி வஞ்சிபுரம், ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் உள்ளிட்ட 6 கிராமங்களைக் கொண்ட பகுதியாகும். இந்த நிலையில், நேற்று முன்தினம் (நவ.4) நள்ளிரவில், பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில், மர்ம நபர்கள் யாரோ குழி தோண்டி சடலத்தை புதைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அதனை காலை நேரத்தில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அச்சமடைந்துள்ளனர். மேலும், இக்கிராமத்தில் இறக்கும் நபர்களை தற்போது சுடுகாட்டில் புதைப்பதில்லை எனவும், பொள்ளாச்சி பகுதியில் உள்ள மின் மயானங்களில் தான் தகனம் மற்றும் எறியூட்டப்படுகிறது எனவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஜமீன் கோட்டாம்பட்டி தலைவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில், ஆனைமலை காவல் நிலைய கண்காணிப்பாளர் ஸ்ரீமதி உத்தரவின் பேரில் ஆய்வாளர் தாமோதரன் மற்றும் கோட்டூர் காவல் நிலைய உதவியாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சூட்கேஸில் கிடந்த மூதாட்டி சடலம்.. மீஞ்சூரில் தந்தை, மகள் சிக்கியது எப்படி?
அந்த விசாரணையில், அம்மன் காயர் கம்பெனியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பத்து குடும்பங்கள் பணிபுரிந்து வருவதாகவும், அதில் மங்கல தேவி (74) என்ற வயதான பெண், கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் சரியில்லாமல், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் காயர் கம்பெனியில் உள்ள வீட்டில் தங்கி இருந்ததாகவும், நேற்று முன்தினம் உடல்நிலை மிகவும் மோசமாகி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து, காயர் கம்பெனி நடத்தும் உரிமையாளர் முருக நாதன் ஊர்த் தலைவர்களிடம் கூறிவிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்த வயதான பெண்ணின் உடலை பாலமநல்லூர் கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டில் புதைத்துச் சென்றதாகவும், இறந்த பெண்ணின் உறவினர் லட்சுமி சாந்தா என்பவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மேலும், பீகார் மாநிலத்திற்கு தங்களால் கொண்டு செல்ல முடியாது என்பதால், இங்கேயே உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்ததன் பேரில், சுடுகாட்டில் புதைத்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்