தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழர் நிலப்பரப்பில் இரும்பின் காலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது - மு.க.ஸ்டாலின் பெருமிதம்! - THE IRON AGE BEGAN IN THE TAMIL

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000 ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2025, 12:06 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000 ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை' நூலினை வெளியிட்டு, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி, கீழடி இணையதளத்தினை இன்று தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

'இரும்பின் தொன்மை' நூல் வெளியீடு (Image credits-Etv Bharat Tamilnadu)

இரும்பு அறிமுகமான காலம்:

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"தமிழ்குடி மூத்தகுடி என்று பெருமை பேசுகிறார்கள் என்று சிலர் விமர்சித்தனர். தமிழர் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நான் அறிவிக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக - இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல உலகுக்கே நான் அறிவிக்கிறேன். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.

தற்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் அண்மையில் கிடைக்கப் பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000 ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு அறிமுகமாயிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம்",என்று தெரிவித்தார்.

ஒரே மாதிரியான முடிவுகள்:

மேலும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இதனை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புனே நகரிலுள்ள பீர்பால் சகானி தொல்அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரிலுள்ள இயற்பியல்ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ் பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும்-பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டு புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வகத்திற்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வும் பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப் பகுப்பாய்வும் ஒரே தாழியிலுள்ள மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இத்ததைய மூன்று நிறுவனங்களிடமிருந்து ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பெறப்பட்ட முடிவுகளை, கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கப் பெற்றன.

இரும்பின் தொன்மை:

தற்போது கிடைத்துள்ள கதிரியக்கக் காலக் கணக்கீடுகள் மற்றும் OSL பகுப்பாய்வு காலக்கணக்கீடுகளின் அடிப்படையில் கி.மு.3500 முற்பகுதிக்கு முன்பே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்று வலியுறுத்துகின்றன. இந்த பகுப்பாய்வு முடிவுகள் இந்தியாவில் உள்ள தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் இரும்பின் தோற்றத்தையும் பண்டைய தொழில்நுட்பத்தைப் பற்றியும் ஆய்வு செய்துவரும் அறிஞர் பெருமக்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க:குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மாணவி.. விவசாயி மகள் பிருந்தா சாதனை!

அந்த அறிஞர் பெருமக்கள் அனைவரும் இந்த அவையில் கூடியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு சேர தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் ஆய்வு முன்னெடுப்புகளை வெகுவாகப் பாரட்டியுள்ளனர். இரும்பின் காலம் குறித்தான முடிவுகளுக்கு ஆதரவாகவும் கண்டுபிடிப்பகளை பாராட்டியும் உள்ளனர். இத்தகைய பகுப்பாய்வு முடிவுகள் ஆய்வுவாளர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன. இவை அனைத்தையும் தொகுத்துத் தான் 'இரும்பின் தொன்மை' என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்கால ஆய்வுகள்:

தேசிய அளவில் தொல்லியலில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்களிடம் பகுப்பாய்வு முடிவுகள் பற்றிக் கருத்துப்பெறப்பட்டு அந்த அறிஞர்களின் கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அகழாய்வு செய்யப்பட்ட இடங்களிலிருக்கும் இரும்புப் பொருட்களின் உலோகவியல் பகுப்பாய்வும் இரும்புத்தாது இருக்கும் தொல்லியல் தளங்களில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அகழாய்வுகளும் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு மேலும் வலுசேர்க்கும். சான்றுகளை வழங்கி தெளிவு பெறவைக்கும். அத்தகைய வலுவான சான்றுகளுக்காக நம்பிக்கையுடன் நாம் காத்திருப்போம்.

அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை' நூலினை வெளியிட்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)

இருந்தாலும், அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை எண்ணிப் பெருமிதத்துடன் கூறுவோம். அதாவது 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகிற்கு அறிவிக்கிறேன்.

இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம். இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.இந்த ஆய்வுகள் பல்வேறு திருப்பு முனைகளை உருவாக்கி வருகிறது.

மயிலாடும்பாறை அகழாய்வு:

தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன. பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன் வேளாண் பயிர்தொழிலில் நெல்பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவுவெளிப்படுத்தியது. தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன்.

இத்தகைய அகழாய்வு முடிவுகள் தமிழ்நாட்டு வரலாற்றிற்கு மட்டுமின்றி இந்திய துணைக் கண்ட வரலாற்றிற்கு முக்கிய திருப்பு முனையாகத் திகழ்ந்து வருகின்றன. இத்தகைய ஆய்வை தொல்லியல் துறையானது தொடர்ந்து செய்து வர வேண்டும் என்று துறையின் அமைச்சரையும் ஆணையரையும் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் - தமிழ் நிலம் - தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல. அரசியலுக்காகச் சொன்னவை அல்ல. வரலாற்று ஆதாரங்கள் - உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details