சென்னை:சென்னை, குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூலை 29) பாமக சார்பில் புதிய கொடிக் கம்பங்கள் நட்டு கொடியேற்றப்பட்டது. அதில் ஒருபகுதியாக, குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி நான்கு சாலை சந்திப்பில் புதிதாக கொடிக் கம்பம் நடப்பட்டு, கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 30) காலை கொல்லச்சேரி நான்கு சாலை சந்திப்பில் புதிதாக நடப்பட்டிருந்த பாமக கொடிக் கம்பத்தை மர்ம நபர்கள் சிலர் அறுத்து எடுத்துச் சென்றதாக வந்த தகவலையடுத்து பாமகவினர் அங்கு ஒன்று திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனை அடுத்து, சம்பவ இடத்தில் ஒன்று திரண்ட பாமகவினர், மர்ம நபர்களின் இந்த செயலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர். இந்த சூழ்நிலையில், குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர், மர்ம நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்ட பாமக கொடிக் கம்பம் இருந்த அதே இடத்தில் புதிதாக மற்றொரு கொடிக் கம்பம் நடப்பட்டு, உடனடியாக அந்த கம்பத்தில் கொடியும் ஏற்றப்பட்டது. மேலும், நேற்று (ஜூலை 29) நடப்பட்ட பாமக கொடிக் கம்பத்தை ஒரே நாளில் மர்ம நபர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள பாமகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இந்த சம்பவம் குறித்து பாமகவினர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கொடிக் கம்பத்தை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:சென்னை ஐஐடி பெண் ஆராய்ச்சியாளரிடம் ரூ.84.5 லட்சம் அபேஸ்.. போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?