திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், அருகே வி.கே.புரத்தில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1,700 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த நவ 9ம் தேதி மதியம் நடிகர் விஜய் நடித்த 'தி கோட்' திரைப்படம் எல்இடி டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
மேலும், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படமும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. மொத்தம் 600 மாணவர்கள் படம் பார்த்துள்ளனர். இதற்காக விஜய் படத்திற்கு ரூ.25-ம், ரஜினி படத்துக்கு ரூ.10-ம் மாணவிகளிடம் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் கற்பிப்பதற்கு பதில், சினிமா திரைப்படம் ஒளிபரப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக புகார்களும் எழுந்தன. இதனிடையே பள்ளியில் சினிமா படங்கள் ஒளிபரப்பப்பட்ட தகவல் கசிந்த நிலையில், இந்து முன்னணி நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், புதிய திரைப்படங்கள் இரண்டும் திரையிடுவதற்கு பள்ளியில் உரிமம் பெற்று உள்ளார்களா? என்று கேள்விகளும் எழும்பின. பள்ளிகளில் சினிமா திரைப்படங்களை திரையிட்டு அதன் மூலம் வசூல் வேட்டையில் பள்ளி நிர்வாகம் இறங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில் கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.