புதுக்கோட்டை: எஸ் குளவாய்பட்டி அருகே உள்ள மாயனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரது மகன் கார்த்திக் (27). இவர் புதுக்கோட்டை பேராங்குளம் அருகே ஆலங்குடி சாலையில் உள்ள பேக்கரியுடன் செயல்படக்கூடிய காபி ஷாப்பில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இதே காபி ஷாப்பில் புதுக்கோட்டை அய்யனார்புரத்தை சேர்ந்த சந்தியாவை (23) கார்த்திக் காதலித்ததாக கூறப்படும் நிலையில், அந்த காதலுக்கு சந்தியா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சந்தியா கார்த்திக்கை காதலிக்க சம்மதம் தெரிவித்த நிலையில், இருவருக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கார்த்திக் சந்தியாவை பிரிந்து விடுவதாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தியா கார்த்திக்குடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் கார்த்திக் அவரது முடிவில் தெளிவாக இருந்த நிலையில், சந்தியா அவருக்கு உறவு முறையில் சகோதரரான அய்யனார்புரம் மூன்றாம் வீதியைச் சேர்ந்த பத்ம கணபதி (24) என்பவரிடம் சந்தியா கார்த்திக் இடையில் ஏற்பட்ட பிரச்சனையை கூறியுள்ளார். மேலும், என்னை வேண்டாம் என்று தெரிவித்து சென்ற கார்த்திகை என் கண் முன்பே ஆட்களை வைத்து அடிக்க வேண்டும் என்று கூறி அதற்கு பணம் தருவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மனைவிக்கு பங்கு கொடுக்காத மாமியாரை கொன்ற மருமகன்.. தேனி நீதிமன்றம் விதித்த தண்டனை என்ன?
அதன்படி, ஜி பே மூலமாக முதலில் 500 ரூபாய் பிறகு 300 ரூபாய் என பிரித்து, இரண்டு தவணையாக பணத்தை பத்ம கணபதிக்கு சந்தியா அனுப்பி வைத்துள்ளார். அதனையடுத்து, சம்பவ இடத்தில் சந்தியா இருந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று பத்ம கணபதி அவரிடம் தெரிவித்துவிட்டு, கார்த்திக் அவரது வீட்டிற்கு சென்றபோது புதுக்கோட்டை கைக்குறிச்சி அருகே உள்ள அழகாம்பாள்புரம் பகுதியில் வழிமறித்த பத்ம கணபதி மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் மூன்று பேர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கி விட்டு அவரிடமிருந்த மொபைல் போன், செயின் உள்ளிட்டவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் இதில் காயமடைந்த கார்த்திக் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில், தனக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் இது குறித்து நடத்திய விசாரணையில், கார்த்திக் முதலில் தன்னை தாக்கிய நபர்கள் வழிப்பறி செய்வதற்காக தாக்கியதாக எண்ணியதாகவும், பிறகுதான் ''சந்தியாவை வேண்டாம் என்று கூறுவியா?'' என்று கேட்டு அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, கார்த்திக்கை தாக்கிய பத்ம கணபதி மற்றும் அவரது நண்பர்களான தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னமணி, கிரிதரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், விசாரணை நடத்தி, இந்த வழக்கில் சந்தியாவின் பெயரையும் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முதலில் காதலித்து பின்னர் தன்னை காதலிக்கவில்லை என்று கூறிய இளைஞரை, காதலியே பணம் கொடுத்து ஆள் வைத்து தாக்கியதும், காதலன் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவமும், புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்