கரூர்: பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா நேற்று மே 12ஆம் தேதி இரவு கம்பம் நடும் விழாவோடு துவங்கியுள்ளது.கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், நடைபெறும் முக்கிய திருவிழாக்களில், மிகவும் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் திருவிழாவும் ஒன்றாக உள்ளது. இத்திருவிழாவிற்குத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழாவின் முதல் நிகழ்வாக மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழா கோலாகலமாக அமராவதி ஆற்றங்கரையில், மூன்று கொப்புகள் கொண்ட வேம்பு கம்பத்திற்கு புனித நீரூற்றி, ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகக் கரூர் மாரியம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தது.
அப்பொழுது வழிநெடுகிலும் வேம்பு கம்பத்திற்கு வேப்பிலை மற்றும் பூக்கள் அணிவித்தும் புனித நீர் ஊற்றியும் மக்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் ஆலயத்தில் நுழைவாயிலில் வேம்பு கம்பம் நடப்பட்டது.இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கரூர் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மேற்பார்வையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கரூர் மாரியம்மன் ஆலயத்தில் மே 13ஆம் தேதி இன்று முதல் மே 29 ஆம் தேதி வரை தொடர்ந்து 17 நாட்களுக்கு அதிகாலை முதல் ஏராளமான பெண்கள் குழந்தைகள் புனித நீர் ஊற்றி வழிபாடு நடத்துவார்கள் என்பதால் தனியாகக் காவல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கரூர் மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே17 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு பூச்சொரிதல் விழா 49 பூத்தட்டுகளோடு கரூர் மாநகரில் உள்ள பகுதி மக்கள் சார்பாக மாரியம்மனுக்குக் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற உள்ளது.