சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெறாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி உள்ளிட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் NSS, NCC. Scout & Guide மற்றும் JRC போன்ற அமைப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறான அமைப்புகளின் செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், அமைப்புகளின் செயல்பாடுகளை செயல்படுத்த, மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளியில் இருத்தல் வேண்டும். மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. இந்த அமைப்புகளின் மூலமாக மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வமைப்புகள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும், மாநில அமைப்பால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே பயிற்சி முகாம் நடத்தப்பட வேண்டும். அமைப்புக்களின் செயல்பாடுகள் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் முகாம்கள் நடத்தப்படும் போது, உரிய அமைப்பைச் சார்ந்த (NSS, NCC, Scout & Guide மற்றும் JRC) மாவட்ட, மாநில பொறுப்பாளரின் கடிதத்தின் அடிப்படையில் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு தனியார் பள்ளிகள் அனுப்பி ஒப்புதல் பெறப்படவேண்டும்.