தென்காசி:நாடாளுமன்றத் தேர்தல் நெறுங்கி வரும் சூழலில், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என விறுவிறுப்பாக தேர்தல் களம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழகத்திற்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. இந்த நிலையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், இலஞ்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், திமுக பிரதிநிதிகள் மற்றும் திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்ட தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.