அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி மகிமைபுரத்தில் சுமார் 131 ஏக்கரில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள தோல் அல்லாத காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த காலணி தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் பல்வேறு துறைகளில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 53 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.88 கோடி மதிப்பீட்டில் 507 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.174 கோடி மதிப்பீட்டில் 21,862 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ரூ.101 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு; மருதையாற்றில் ரூ.25 கோடியில் புதிய தடுப்பணை; ரூ.645 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்பில் தீயணைப்பு துறைக்கு புதிய கட்டிடம்; பெரம்பலூரில் புதிய வெங்காய மையம்; நரியனூர், வெற்றியூர், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்ட மேம்பாடு உள்ளிட்ட பல திட்டங்களையும் அறிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "ரூ.578 கோடி மதிப்பில் மகளிர் பேருந்துகளில் கடந்த நான்காண்டுகளில் பயணம் செய்துள்ளனர். விழா காலங்களில் சென்னையிலிருந்து புறப்படும் பொதுமக்கள் எந்த வித சிரமமும் இன்றி தங்களது சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். தமிழகத்தில் மக்களுக்கு தேவையான திட்டம், அதற்கு தேவையான நிதி ஆகியவற்றை அதிகாரிகளே பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணாமல் நேரடியாக கள ஆய்வு செய்து மக்களின் ஆதரவு பெற்ற அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த ஆட்சியில் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. இந்த ஆட்சியில் மக்களின் பிரச்சினைகளை தெரிந்துகொண்டு, அவற்றை தீர்ப்பதால் என்னை பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். நான் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பெருந்திரளாக கூடும் மக்களின் கூட்டத்தை பார்த்து, அவர்களின் நம்பிக்கை, அன்பை, கண்டு எடப்பாடிக்கு பெரிய கலக்கம் உருவாகியுள்ளது.
அதனால், தினந்தோறும் எடப்பாடி பழனிசாமி தன்னை மறந்து மீடியா முன்பு பொய் மூட்டைகளை அடுக்கி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி கொடுத்ததாகவும் கூறி வருகிறார். பொய்க்கு மேக்கப் போட்டால் பளிச்சென்று உடனே தெரிந்து விடும் அளவிற்கு அவர் கூறி வருகிறார்.