சென்னை:CII எனப்படும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பாக INVESTOPIA GLOBAL என்ற முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை அடையாறில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஐக்கிய அரபு எமிட்ரேட்ஸ் பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா, உட்பட பல ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “ துபாய்-யில் ஒரு நிகழ்வில் UAE பொருளாதர அமைச்சரை சந்தித்த போது அவரை சென்னைக்கு அழைத்து ஒரு முதலீட்டாளர் மாநாடு நடத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இன்று இந்த மாநாடு நடைபெறுகிறது. நாளை முதலமைச்சரை UAE பொருளாதார துறை அமைச்சர் சந்தித்து பேச இருக்கிறார். முதலீடுகள் குறித்து பல பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே பல புதிய முதலீடு ஒப்பந்தகள் நடைபெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாடு தற்போது தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. இதில் UAE யும் சேர்ந்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சி இன்னும் பிரகாசமாக இருக்கும். இதன் மூலம் மிகப்பெரிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
பல்வேறு முதலீட்டாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்துள்ளனர். இந்த மாநாடு முழுமையாக முடிந்த பிறகு தான் இந்த மாநாட்டின் மூலம் எவ்வளவு முதலீடுகள் வர போகிறது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும். வெறுமனே இத்தோடு முடிந்து விடமால் இதனைத் தொடர்ந்தும் முதலீட்டுகள் பற்றி ஆலோசனை பேசுக்கள் நடைபெற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். அதற்காக தற்போது ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்க போகும் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி: இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் சாதனங்களில் 30 சதவீதம் தமிழகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கும். தமிழகத்தில் இருந்து எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஏற்றுமதி என்பது ஆண்டுக்கு 9 பில்லியன் டாலர் என்று இருந்த இந்த நிலையில் தற்போது ஆண்டுக்கு 12 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும்.
இந்த முறை மேலும் பல புதிய எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்கள் வர உள்ளது.மிகப்பெரிய எலெக்ட்ரானிக்ஸ் வளர்ச்சி தமிழகத்தில் ஏற்பட உள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு நல்ல வருமானம் மற்றும் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.