மயிலாடுதுறை:தரங்கம்பாடி உலகப்புகழ் பெற்ற புராதனச் சின்னமாகவும், சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. இந்தியாவில் ஓசோன் காற்று அதிகம் வீசும் கடற்கரை நகரமாகவும் தரங்கம்பாடி விளங்குகிறது. ஏப்ரல், மே, ஜுன், ஜுலை மாதங்களில் அதிகமாக காற்று வீசுகிறது. டென்மார்க் நாட்டவரால் கி.பி 1620இல் புகழ் வாய்ந்த டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது.
இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை பீடமாக அமைந்தது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இக்கோட்டை இருந்தது. 1978ஆம் ஆண்டு முதல் டேனிஷ் கோட்டை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டிற்கு மாறி பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு பண்டைய காலப் பொருட்கள், பீரங்கிகள், பட்டையங்கள், பத்திரங்கள், நாணயங்கள், அகழ்வாய்வுப் பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. டேனிஷ் கோட்டையில் பண்டக வைப்பறை, சமையலறை, வீரர்கள் தங்கும் அறை, சிறைச்சாலை, வெடி பொருட்கள் வைக்கும் அறை ஆகியவை உள்ளன.
மேலும், டென்மார்க் நாட்டின் ஆளுமைக்கு கீழிருந்த போது தரங்கம்பாடியை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆளுநர் மாளிகையும் இங்கு உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் வரலாற்றுச் சுவடுகளை தாங்கி நிற்கும் தரங்கம்பாடிக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
400 ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கும் டேனிஷ் கோட்டையை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பாக 3 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டேனிஷ் கோட்டையும், ரூ.4 கோடியே 33 லட்சம் மதிப்பில் டேனிஷ் கவர்னர் மாளிகையும் என மொத்தமாக ரூ.7 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், டேனிஷ் கோட்டையில் பழைய பூச்சுகள் அகற்றப்பட்டு புதிய சுண்ணாம்பு கலவை பூச்சு பூசப்பட்டு வருகிறது. இதற்காக கடுக்காய், வெல்லம் கொண்ட கரைசல் தயார் செய்யப்பட்டு, சுண்ணாம்பு மற்றும் மணல் சேர்த்து பழங்கால கட்டுமான கலவை தயார் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. கட்டுமானப் பணியில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் கட்டுமான தொழிலாளர்கள் பாரம்பரிய முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதிலமடைந்த பகுதிகள், செங்கல் துகள்கள் மற்றும் பண்டைய கால செங்கற்கள் கொண்டும் பழமை மாறாமல் புதுப்பித்து வருகின்றனர். பணிகள் முடிவடைந்தால் வரலாற்றுச் சின்னங்கள் அதே கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:நாங்கல்லாம் யாரு தெரியும்ல.. கண்ணில் பார்ப்பவர்கள் மீதெல்லாம் தாக்குதல்..3 பேர் கைதானதன் பின்னணி என்ன? - Sirkazhi youths atrocities