திருவையாறு: தஞ்சையைச் சேர்ந்தவர் தமிழரசன் (24). இவர் நேற்று தனது காதலியுடன் அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, தஞ்சை திருவையாறு புறவழிச் சாலையில் சென்ற போது, தமிழரசனின் காதலிக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டது.
இதற்காக அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் தமிழரசன் மற்றும் அவரது காதலியை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். மேலும், பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
அதற்கு, தமிழரசன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் உங்கள் வீட்டில் யாரிடமாவது இருந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பு என்று மிரட்டி உள்ளனர்.
இதனால், உயிருக்கு பயந்த தமிழரசனின் காதலி தனது சகோதரியிடம் கூகுள் பே மூலம் உடனடியாக ரூபாய் 3 ஆயிரம் தமிழரசனின் செல்போனுக்கு அனுப்புமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பணம் தமிழரசனின் செல்போனுக்கு வந்ததும், தமிழரசனிடம் பணம் கேட்டு மிரட்டிய அந்த நபர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டது.